ஈப்போ, ஜூன் 11-
பேராக், ஈப்போ-வில் 5 வயது வளர்ப்பு மகளை சித்திரவதை செய்து மரணம் விளைவித்ததாக சந்தேகிக்கப்படும் தம்பதியரை போலீஸ் நேற்று கைது செய்தது.
ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையின் மருத்துவ அதிகாரியிடமிருந்து பெறப்பட்ட புகாரை அடுத்து, 27 வயதுடைய பெண்ணும் 66 வயதுடைய அவரது கணவரும் கைது செய்யப்பட்டதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கோமிசியோனர் அபாங் ஜைனல் அபிடின் அபாங் அஹ்மத் கூறினார்.
முன்னதாக, நேற்று இரவு மணி 9.30 அளவில், அவசர சிகிச்சைக்காக சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு வரப்பட்ட அச்சிறுமி, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
அவரது உடலை பரிசோதித்ததில், உடம்பில் வீக்கங்களும் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதற்கான தடயங்களும் இருந்தது சந்தேகத்திற்கு இடமளித்தால், மருத்துவமனை தரப்பினர் போலீசுக்கு தகவல் அளித்தனர்.
பின்னர், அச்சிறுமியின் உடல் மீது மேற்கொள்ளப்பட்ட உடற்கூறு ஆய்வில், அவரது பிறப்பு உறுப்பு உள்பட சில பகுதிகளில் சதை கிழிந்து புண்கள் இருந்தது கண்டறியப்பட்டது.
அதற்கடுத்து, நேற்று இரவு மணி 9.45 அளவில்,தாமான் மல்கோப் சிலிபின்-லுள்ள வீட்டில் கைது செய்யப்பட்ட அவ்விருவருரையும் தடுக்காவலில் வைத்து போலீஸ் விசாரித்து வருவதாக, அபாங் ஜைனல் கூறினார்.