PPR வீடுகளை வாடகைக்குவிட்டும் வருமானம் ஈட்டுவோர் மீது நடவடிக்கை

கோலாலம்பூர், ஜூன் 11-

அரசாங்கத்தின் உதவித்தொகை வழங்கப்பட்ட மக்கள் வீடமைப்பு திட்டம் – PPR-ரில் இடம்பெற்றுள்ளவர்கள், தங்களது வீடுகளை வாடகைக்கு விட்டு வருமானம் ஈட்டுவது கண்டறியப்பட்டால், அரசாங்கம் அவர்கள் மீது விரைந்து நடவடிக்கையை எடுக்கும்.

வீடமைப்பு ஊராட்சி துணை அமைச்சர் டத்தோ அய்மான் அதிரா சாபு, அந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

சில தரப்பினர், தங்களக்கு வழங்கப்பட்டுள்ள வீட்டை, மூன்றாம் தரப்புக்கு வழங்கியுள்ளதை, அமைச்சு கடுமையாக கருதுகின்றது.

வாடகை அல்லது வீட்டு உரிமைக்கான உடன்படிக்கையின்படி, அத்தரப்பினரின் அச்செயல் பெரும் தவறு என கூறிய அய்மான் அதிரா, உடன்படிக்கையை மீறுவோருக்கு எதிராக கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள PPR வீடமைப்பு திட்டங்களில், வீடு ஒன்றுக்கு அரசாங்கம் 240 ஆயிரம் வெள்ளி உதவித்தொகையை வழங்கியுள்ளது. அதன் வழி, அத்திட்டத்தில் இடம்பெற்றவர்கள் வெறும் 35 ஆயிரம் வெள்ளியில் வீடுகளை வாங்கியுள்ளனர்.

மாதம் ஒன்றுக்கு அத்தரப்பினர் அதிகபட்சமாக 300 வெள்ளியை பொருளகங்களில் செலுத்தும் வேளையில், அவர்களில் சிலர், தத்தம் வீடுகளை வாடகைக்கு விட்டு, மாதத்திற்கு ஆயிரம் ரிங்கிட் வரையில் வருமானம் ஈட்டுவதாக புகார்கள் கிடைத்துள்ளன.

WATCH OUR LATEST NEWS