பினாங்கில் இலக்கிடப்பட்ட மக்களுக்கு நீருக்கான உதவித் தொகையை வழங்கும்படி CAP கோரிக்கை

பினாங்கு, ஜூன் 11-

பினாங்கில், அனைத்து பயனீட்டாளர்களுக்கும் நீரை இலவசமாக வழங்குவதற்கு பதிலாக, மாநில அரசாங்கம் இலக்கிடப்பட்ட மக்களுக்கு மட்டுமே நீருக்கான உதவித் தொகையை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன் வழி, பணக்காரர்களைத் தவிர, உண்மையில் சிரமப்படுகின்றவர்களுக்கும் உதவிகள் தேவைப்படுகின்றவர்களுக்கும் மட்டுமே அந்த உதவி சென்று சேரும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் – CAP தலைவர் மொஹிதீன் அப்துல் காதர் தெரிவித்தார்.

ஒவ்வொரு மாதமும் 10 ஆயிரம் லிட்டர் என 6 மாதங்களுக்கு நீரை இலவசமாக வழங்கும் மாநில அரசின் முடிவால், நீச்சல் குளங்களுடனான வீடுகளையும் அதிகமான வாகனங்களையும் கொண்டிருக்கும் பணக்காரர்களும் பயனடைவார்கள்.

நீரை வீணடிக்கும் அத்தரப்பினருக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என மொஹிதீன் வலியுறுத்தினார்.

பினாங்கில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நீர் கட்டணம் அதிகரிக்கப்பட்டதற்கு பக்காத்தான் ஹாராப்பான்-னின் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.

அதனை அடுத்து, மாநில அரசாங்கம் அந்த இலவச நீர் திட்டத்தை அறிவித்துள்ளதை சாடிய மொஹிதீன், அரசியல் ரீதியிலான அழுத்தங்களுக்காக, பினாங்கு அரசாங்கம் அதன் கொள்கையிலிருந்து அடிப்பணியக்கூடாது என்றார்.

நீர் பராமரிப்பு மற்றும் சுத்திரிப்புக்கான செலவுகள் அதிகமாக உள்ள நிலையில், நாட்டில் பினாங்கு மக்கள்தான் நாள் ஒன்றுக்கு அதிகமான நீரைப் பயன்படுத்துவதாக மொஹிதீன் கூறினார்.

WATCH OUR LATEST NEWS