கோலாலம்பூர், ஜூன் 11-
இலக்கிடப்பட்ட மக்களுக்கு மட்டுமே டீசலுக்கான உதவித்தொகையை வழங்கும் நடவடிக்கையின் வழி, மிச்சப்படுத்தப்படும் 4 பில்லியன் வெள்ளி, அமைச்சர்களின் ELAUNS தொகையை அதிகரிப்பதற்கு பயன்படுத்துவதற்கு அல்ல என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெளிவுபடுத்தினார்.
நடப்பில், பொது போக்குவரத்து மற்றும் மக்களுக்கான STR எனப்படும் ரொக்கப் பணம் உதவி திட்டம் ஆகியவற்றுக்கான செலவுகள், 10 பில்லியன் வெள்ளி வரை எட்டியுள்ளது.
டீசலுக்கான உதவித் தொகையை சீர்ப்படுத்தும் நடவடிக்கையின் வழி, மிச்சப்படுத்தப்படும் தொகை, அவ்விரு திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படும் என பிரதமர் கூறினார்.
SARA உதவித் தொகை, ஆண்டுக்கு 600 வெள்ளியிலிருந்து ஆயிரத்து 200 வெள்ளியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த திட்டம் உள்பட STR ரொக்கப் பண உதவி திட்டத்தின் வழி, 9 மில்லியன் பெருநர்கள் பலனடைகின்றனர்.
பணபலம் படைத்தவர்களும், வெளிநாட்டினரும் உதவித்தொகையைப் பெறுவதைத் தவிர்க்கவே, அரசாங்கம் இலக்கிடப்படவர்களுக்கு உதவித்தொகையை வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியுள்ளதை அனைவரும் முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும்.
அரசாங்கத்தின் அந்நடவடிக்கைக்கை மக்கள் சாடிவருவதை மறுப்பதற்கில்லை. ஆனாலும், உதவியை வழங்குவதில், முந்தைய அரசாங்கங்களின் காலாவதியான அந்த திட்டத்தை சரிசெய்ய வேண்டிய கடப்பாடு நடப்பு அரசாங்கத்திற்கு உள்ளது.
ஆசியாவிலேயே மலேசியாவில்தான் ஆக அதிகமாக உதவித்தொகை வழங்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், நாட்டின் நிதிநிலைமை மற்றும் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டே, மக்கள் விரும்பாத அந்நடவடிக்கையை, அரசாங்கம் அமல்படுத்தியுள்ளதாக கூறினார்.