சிங்கப்பூர் விமானத்தில் காயம் அடைந்த அனைவருக்கும் இழப்பீடு

சிங்கப்பூர், ஜூன் 11-

அண்மையில் லண்டனிலிருந்து சிங்கப்பூருக்கு வந்து கொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் SQ 321 விமானம் நடுவானில் மிகக் கடுமையாக ஆட்டங்கண்ட சம்பவத்தில் காயம் அடைந்த அனைவருக்கும் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மே 20 ஆம் தேதி நிகழ்ந்த இச்சம்பவத்தில் ஒருவர் மாண்டார். பலர் காயமடைந்தனர். விமானம் ஆட்டம் கண்டு, பயணிகள் காயம் அடைந்ததால் அந்த போயிங் 777 ரக விமானம் தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கிற்குத் திருப்பிவிடப்பட்டு, அவசரமாக தரையிறங்கியது. .

காயமடைந்தோர் அங்குள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், சொற்ப காயத்திற்கு ஆளானவர்களுக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், தலா 10,000 அமெரிக்க டாலர் அல்லது 13 ஆயிரத்து 534 சிங்கப்பூர் வெள்ளி இழப்பீட்டுத் தொகையாக வழங்கியுள்ளது.

கடுமையான காயங்களால் பாதிக்கப்பட்டு, நீண்ட கால மருத்துவப் பராமரிப்பும், நிதி உதவியும் தேவைப்படக்கூடியவர்களுக்கு முன்பணமான தலா 25 ஆயிரம் அமெரிக்க டாலர் வழங்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கூறுகிறது.

பயணிகள் அனைவருக்கும் தங்கள் பயண சீட்டுக்கான பணம் முழுவதும் திருப்பிக்கொடுக்கப்படும் அதேவேளையில் பேங்காக்கிலிருந்து சிங்கப்பூருக்கு திரும்பிய அனைத்து பயணிகளுக்கும் உடனடி செலவுக்கு ஆயிரம் அமெரிக்க டாலர் தரப்பட்டுள்ளது.

கடுமையான காயங்களால் பாதிக்கப்பட்ட பயணிகளை இழப்பீட்டுத் தொகை குறித்து கலந்துரையாட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அழைத்துள்ளது.

WATCH OUR LATEST NEWS