கோலாலம்பூர், ஜூன் 11-
இஸ்ரேலிய பிரஜைக்கு துப்பாக்கிகளை விற்பனை செய்ததாக சந்தேகிகப்படும் உள்ளூரைச் சேர்ந்த கணவன், மனைவிக்கு எதிரான வழக்கு விசாரணை வரும் ஜுலை 11 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
41 வயது ஷரிபா ஃபராஹா சையத் ஹுசின் மற்றும் அவரின் 43 வயது கணவர் அப்துல் அசிம் முகமது யாசின் ஆகிய இருவரும் கோலசிலாங்கூர், செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று காலையில் மீண்டும் நிறுத்தப்பட்டனர்.
இவ்வழக்கு தொடர்பாக சில ஆவணங்கள், எதிர்தரப்பு வழக்கறிஞருக்கு சார்வு செய்வதற்கு அவற்றை தயாரிக்கும் பணி இன்னும் நிறைவு பெறவில்லை என்று துணை பப்ளிக் பிராசிகியூட்டர் ஃபசீதா ஃபைக் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஷரிபா ஃபராஹா சையத் ஹுசின்- னுக்கு சிறைச்சாலையில் பல்வேறு நெருக்குதல் அளிக்கப்பட்டு வருவதாக அவரின் வழக்கறிஞர் ஈசா முகமது பசீர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
உடல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள அந்தப் பெண்மணியை சிறைச்சாலைக்கு வெளியே சிகிச்சை பெறுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று அவர் நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார்.