மனைவியை பெஸ்போல் மட்டையில் அடித்ததாக குற்றச்சாட்டு

கோலாலம்பூர், ஜூன் 11-

தனது மனைவியை பெஸ்போல் மட்டையினால் அடித்ததுடன், பிளாஸ்டிக் நாற்காலியை தூக்கி எறிந்து, அராஜகம் புரிந்ததாக ஆடவர் ஒருவர் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

45 வயது இந்தர் சிங் என்று அந்த நபர், கடந்த மே 5 ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் கோலாலம்பூர், ஜாலான் ஈப்போ, செந்துல், தாமான் ரெயின்போ- வில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் தனது மனைவி சுக்விந்தர் காவுர் என்பவரை சரமாரியாக அடித்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

தனது மனைவியை தாக்குவதற்கு இந்தர் சிங், பெஸ்போல் மட்டை, மோப்புக்கட்டை மற்றும் நாற்காலியை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 10 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது பிரம்படித்தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 324 பிரிவின் கீழ் இந்தர் சிங் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

நீதிபதி முகமது டெரில் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது, தனக்கு எதிரான குற்றத்தை இந்தர் சிங் ஒப்புக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து அவருக்கு எதிரான தீர்ப்பு வரும் ஜுலை 18 ஆம் தேதி அளிக்கப்படவிருக்கிறது. அதுவரையில் இந்தர் சிங்- கை 4 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவிப்பதற்கு நீதிபதி அனுமதி அளித்தார்.

WATCH OUR LATEST NEWS