நச்சுத்தன்மையிலான உணவை உட்கொண்ட இருவர் மரணம்

சிலாங்கூர், ஜூன் 11-

சிலாங்கூர், கோம்பாக்- கில் உள்ள பள்ளி ஒன்றில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட பிஹுன்- னிலும் முட்டையிலும் நச்சுத்தன்மை இருந்து இருக்கலாம் என்று நம்பப்படும் உணவை உட்கொண்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.

முதல் சம்பவத்தில் தனக்கு வழங்கப்பட்ட உணவை 17 வயது இளைஞர் தனது தாயாருக்கு எடுத்துச்சென்று கொடுத்துள்ளார். அதனை உண்ட அந்த மாது, தொடர்ந்து வாந்தி, வயிற்றுப்போக்குக்கு ஆளாகியிருக்கிறார்.

நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் அம்புலன்ஸ் வண்டியின் மூலம் அந்த மாது கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அந்த மாதுவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் இறந்து விட்டதாக உறுதி செய்துள்ளனர் என்று கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நூர் ஆரிஃபின் முகமது தெரிவித்தார்.

இரண்டாவது சம்பவத்தில் இரண்டு வயது பெண் குழந்தை உயிரிழந்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார். சம்பந்தப்பட்ட பள்ளியில் பாதுகாவலராக வேலை செய்து வரும் அந்த குழந்தையின் தந்தை, கடந்த சனிக்கிழமை தனக்கு கிடைத்த உணவை வீட்டிற்கு எடுத்து வந்து தனது குழந்தைக்கு ஊட்டியதாக நம்பப்படுகிறது. அதனை உண்ட அக்குழந்தை வாந்தி, வயிற்றுப் போக்கு மற்றும் காய்ச்சலுக்க ஆளாகியுள்ளது. செலாயாங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்தக் குழந்தை சிகிச்சையின் போது இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று ஏசிபி நூர் ஆரிஃபின் முகமது தெரிவித்தார்.

இவ்விரண்டு உயிரிழப்புகளும், திடீர் மரணம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தகவல் கொண்டிருப்பவர்கள், இன்ஸ்பெக்டர் R. கல்பனாவுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

WATCH OUR LATEST NEWS