அவர்கள் புறம்போக்குவாசிகள் அல்ல, உங்களால் புறம்போக்குவாசிகளாக ஆக்கப்பட்டவர்கள்- முன்னாள் அமைச்சர் காலிட் சமாட் சாடல்

கோலாலம்பூர், ஜூன் 11-

கோலாலம்பூர், கம்போங் சுங்கை பாரு-வில் இன்னமும் வசித்து கொண்டிருக்கும் 37 குடும்பங்களின் குடிசை வீடுகளில் தண்ணீர், மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டு, அவர்களை சிரமத்தில் ஆழ்த்தியுள்ள மாநகர் மன்றப் பொறுப்பாளர்களை முன்னாள் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் முன்னாள் கூட்டரசு பிரதேச அமைச்சர் காலிட் சமாட் இன்று கடுமையாக சாடினார்.

பாதிக்கப்பட்டுள்ள குடிசைவாசி மக்களின் பிரச்னைகளையும், அவர்களின் கோரிக்கைகளையும் அரசாங்கம் காது கொடுத்து கேட்க வேண்டுமே தவிர மேம்பாட்டாளர் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்படக்கூடாது என்று அமானா கட்சியின் முன்னாள் ஷா ஆலாம் எம்.பி.யுமான காலிட் சமாட் தெரிவித்தார்.

சிறு வயது பிள்ளைகளுடன் அந்த குடிசை வீடுகளில் உழன்று கொண்டு இருக்கும் மக்களை வெளியேற்றுவதற்கு அவர்களின் வீடுகளில் தண்ணீர் மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளை துண்டித்து, வெளியேற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு இருப்பது மனிதாபிமான செயலா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

பாதிக்கப்பட்ட மக்கள், புறம்போக்குவாசிகள் அல்ல. உங்களால் புறம்பபோக்குவாசிகளாக ஆக்கப்பட்டவர்கள் என்று காலிட் சமாட் நினைவுறுத்தினார்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் மேம்பாட்டாளர் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளித்து, அவர்களின் மேம்பாட்டுத்திட்டத்திற்கு வழிவிடுவதற்காக பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று வீடுகள் ஏற்படுத்தித்தரப்படாமல், அவர்கள் விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று புறம்பபோக்குவாசிகளாக இருக்கிறார்கள் என்றால் அதற்கு அரசாங்கம்தான் காரணம், என்பதுதான் நிதர்சனமான உண்மையாகும் என்று கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் காலிட் சமாட் இதனை தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS