கோம்பாக், ஜூன் 12-
கடந்த திங்கட்கிழமை கோம்பாக்கில் உள்ள ஒரு பள்ளியில் நச்சு உணவால் ஏற்பட்ட 17 வயது சிறுவன் மற்றும் இரண்டு வயது சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணையில் 8 பேரிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டது.
இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மாணவர்களின் குடும்பத்தினர் மற்றும் குறிப்பிட்ட சமயப் பள்ளிக்கு உணவு வழங்கியவர்களின் வாக்குமூலங்களும் இதில் சேர்க்கப் பட்டுள்ளன என கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நூர் அரிபின் முகமட் நசீர் கூறினார்.
சமயப் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் உணவு உண்டதன் விளைவாக பாதிக்கப்பட்ட மற்ற நபர்களையும் போலீசார் அடையாளம் கண்டு வருவதாக அவர் கூறினார்.
இச்சம்பவம் தொடர்பில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், பள்ளி தலைமையாசிரியர், மற்றும் உணவு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பிற நபர்களையும் வாக்குமூலம் பெற காவல்துறை அழைக்கும் என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் ஏசிபி நூர் அரிபின் தெரிவித்தார்.