மலாக்கா, ஜூன் 13-
சிங்கப்பூரை தளமாக கொண்டு செயல்படும் சட்டவிரோத வட்டிமுதலை கும்பலின் கையாளாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் ஆடவரை போலீஸ் நேற்று கைது செய்தது.
மலாக்கா, அலோர் காஜா, தாமான் மெங்குவாங்-ங்கில் இம்மாதம் 6ஆம் தேதி, வாகனத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பில், அதன் உரிமையாளரான 38 வயதுடைய பெண் ஒருவர் அளித்திருந்த புகாரின் அடிப்படையில் 25 வயதுடைய அவ்வாடவரை போலீஸ் கைது செய்துள்ளது.
சம்பந்தப்பட்ட வட்டி முதலை கும்பலிடம், வேலை ஒன்றுக்கு ஆயிரம் வெள்ளியைப் பெற்றுக்கொண்டு, அதுப்போன்ற செயல்களில் அவர் ஈடுபட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக மலாக்கா போலீஸ் தலைவர் டத்தோ ஜைனோல் சமா தெரிவித்தார்.
இதுவரையில், மலாக்கா மற்றும் பேராக்-க்கில் பெட்ரோல் குண்டுகளை வீசிய இரு சம்பவங்களில், அவ்வாடவர் 10ஆயிரம் வெள்ளி இழப்பை ஏற்படுத்தியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
சதிநாச வேலையில் ஈடுபட்டதற்காக குற்றவியல் சட்டம் செக்சியன் 435 பிரிவின் கீழ், விசாரணை மேற்கொள்ளப்படும் வேளை, குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவ்வாடவருக்கு 14 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது அவையிரண்டுமே விதிக்கப்படலாம் என ஜைனோல் கூறினார்.