கோலா தெரெங்கானு, ஜூன் 25-
நாட்டில் பவளப்பாறைகள் அழிவை தடுப்பதற்கு பவளப்பறைகள் நிறைந்த பகுதிகளை தற்காலிகமாக மூடுவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக ஆய்வாளர் ஒருவர் பரிந்துரை செய்துள்ளார்.
பவளப்பாறைகளின் அழிவை தடுத்து, அவை இனவிருத்தி செய்வதற்கு ஏதுவாக அப்பகுதிகளில் மக்களின் நீர் நடவடிக்கைகள் தடை செய்யப்பட வேண்டும் என்று திரெங்கான மலேசிய பல்கலைக்கழகத்தின் பவளப்பாறை ஆய்வியல் நிபுணர் பேராசிரியர் டாக்டர் டான் சுவான் ஹாங் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடல் வாழ் உயிரினங்களின் மிக முக்கிய உயிர்வாழ் ஆதாரப் பகுதியாக விளங்கி வரும் பவளப்பறைகள் கிட்டதட்ட 50 விழுக்காட்டிற்கு அதிகமாக அழியும் அபாயத்தில் உள்ளது.
கடற்பகுதியில் வாழ்ந்து, மடிந்த பாசியினங்களின் மறு வடிவமாக விளங்கும் பவளப்பாறை திட்டுகள் வீற்றிருக்கும் இடங்களில் மக்களின் நீர் நடவடிக்கைகள் குறைக்கப்பட்டால் அவை பேரழிவிலிருந்து தடுக்க முடியும்.
இதன் தொடர்பில் பவளப்பாறைகள் திட்டுகளையும், தீவுக்கூட்டங்களையும் பாதுகாக்க அரசாங்கம், தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு எடுத்தால் மட்டுமே கடலில் தோட்டங்களைப் போல் வண்ண மயமாக காட்சித் தரும் பவளத்திட்டுகளின் அளவும், அடர்த்தியும் குறைவது தடுக்கப்பட முடியும் என்று டாக்டர் டான் சுவான் ஹாங் பரிந்துரை செய்துள்ளார்.