பட்டர்வொர்த், ஜூன் 26-
போலிசின் பதில் தாக்குதலில் இரு குற்றவாளிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
பினாங்கு, பட்டர்வொர்த், சுங்கை லோகன், ஜலான் பெர்மடாங் பார் எனுமிடத்தில், இன்று அதிகாலை மணி 2 அளவில், போலீஸ் நடத்திய பதில் தாக்குதலில், இரு குற்றவாளிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
முன்னதாக, 41 மற்றும் 54 வயதுடைய அவ்விரு ஆடவர்களும் பெரோடுவா மைவி ரக காரில் சந்தேகத்திற்கு இடமளிக்கின்ற வகையில் சென்றதை அடுத்து, அவர்களை பின்தொடர்ந்த போலீஸ், வாகனத்தை நிறுத்தும்படி அவ்விருவருக்கும் உத்தரவிட்டுள்ளது.
ஆனால், அவ்விருவரும் வாகனத்தை வேகமாக செலுத்தியதோடு, போலிஸை நோக்கி சில முறை சுட்டுள்ளனர்.
தற்காப்புக்காக போலிஸ் பதிலுக்கு துப்பாக்கிச் சூட்டை நடத்திய போது, அவ்விருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அவர்கள் பயணித்த வாகனத்தை சோதணையிட்டதில், இரு துப்பாக்கிகளும் தோட்டாக்களும் கண்டெடுக்கப்பட்டன.
அவ்விரு ஆடவர்கள் மீது போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல் தொடர்பில், 12 முந்தைய குற்றப்பதிவுகள் உள்ளன.
குற்றவியல் சட்டம் செக்சியன் 307 மற்றும் 1960ஆம் ஆண்டு ஆயுத சட்டம் ஆகியவற்றின் கீழ், விசாரணை மேற்கொள்ளப்படுவதாக போலீஸ் தெரிவித்துள்ளது.