கோலாலம்பூர், ஜூன் 26-
6 மாதங்கள் மேற்கொள்ளப்பட்ட உளவு நடவடிக்கையின் பலனாக, கோலாலம்பூரில், சிறார்களையும் பெண்களையும் பிச்சையெடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி வந்த கும்பலை, குடிநுழைவுத் துறை அடையாளம் கண்டுள்ளது.
ஜலான் சுல்தான் அஸ்லான் சாலையிலுள்ள ஒரு கடைவீட்டில், நேற்றிரவு மணி 9 அளவில் மேற்கொள்ளப்பட்ட சோதணையில், பாக்கிஸ்தான் நாட்டவரை பின்புலமாக கொண்டு செயல்பட்டு வந்த அக்கும்பல் வசமாக சிக்கியது.
கைப்பேசி கடை, சலவை கடை, முடி திருத்தும் கடை ஆகிய கடைகளின் போர்வையில், அக்கும்பல் அந்நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளது.
ஜலான் சௌ கிட், மஸ்ஜித் இந்தியா, ஜலான் செந்துல் ஆகிய இடங்களுக்கு, பிச்சையெடுக்க, அக்கும்பல் சிறார்களை பெரியவர்களுடன் அனுப்பி வைப்பதும் காலை மணி 8க்கு அவர்களை பிச்சையெடுக்க அனுப்பினால், இரவு மணி 8 முதல் 11 மணி வரையில் அவர்களை அங்கிருந்து தங்குமிடத்திற்கு மீண்டும் அழைத்து வருவது தெரியவந்துள்ளது.
அதைவிட கொடுமை, பொதுமக்களிடமிருந்து பரிவை பெற, சம்பந்தப்பட்ட சிறார்களுக்கு மயக்கத்தை ஏற்படுத்த, அக்கும்பல் இரும்பல் மருந்தை அவர்களுக்கு வழங்கியுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.
அதனை அடுத்து உள்நாட்டவர் ஒருவர் உள்பட, 10 மாத குழந்தை முதல் 59 வயதுக்கு உட்பட்ட 80 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக, கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.