கோலாலம்பூர், ஜூன் 26-
இம்மாதம் 9ஆம் தேதி தொடங்கி 15ஆம் தேதி வரைக்குமான காலக்கட்டத்தில், நாட்டில் டெங்கி காய்ச்சல் கண்டவர்களின் எண்ணிக்கை ஈராயிரத்து 900 பேராக அதிகரித்துள்ளது;
ஐவர் உயிரிழந்துள்ளனர்.
அதற்கு முந்தைய வாரத்தில், ஈராயிரத்து 508 பேருக்கு டெங்கி காய்ச்சல் பீடித்திருந்தது.
இவ்வாண்டு தொடக்கம் முதல் இம்மாதம் 15ஆம் தேதி வரையில், டெங்கி காய்ச்சல் கண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 70 ஆயிரத்து 37ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 பேராகவும் அதிகரித்துள்ளது.
கடந்தாண்டு அதே காலக்கட்டத்தை ஒப்பிடுகையில், மொத்தம் 54 ஆயிரத்து 139 பேருக்கு டெங்கி காய்ச்சல் பீடித்திருந்த நிலையில், 39 பேர் உயிரிழந்திருந்தனர்.
இவ்வேளையில், பொதுமக்கள் சுயபாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என தலைமை சுகாதார இயக்குநர் டத்தூ டாக்டர் முஹம்மது ரட்ஸி அபு ஹாசன் வலியுறுத்தினார்.
காலை மணி 5 தொடங்கி காலை மணி 8 வரையிலும் மாலை மணி 5 தொடங்கி இரவு மணி 8 வரையிலும், டெங்கி கொசுக்களின் வீரியம் அதிகமாக இருக்கும் என்பதால், அதன் கடியிலிருந்து தப்பிக்க,வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர், வெளிச்சமான ஆடைகளையும் உடலின் முழு பகுதிகளை போர்த்திய உடைகளையும் அணியும்படி அவர் கேட்டுக்கொண்டார்.