கோலாலம்பூர், ஜூன் 26-
இலக்கிடப்பட்ட மக்களுக்கு மட்டும் RON95 வகை பெட்ரோலுக்கான உதவித்தொகையை வழங்குவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக, பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லி தெரிவித்தார்.
தற்போதைக்கு, இம்மாதம் 10ஆம் தேதி அமலாக்கம் கண்ட டீசலுக்கான உதவித்தொகை மறுசீரமைப்பு நடவடிக்கை, நிலைத்தன்மை காண்பதோடு, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அது அடைவதை உறுதிபடுத்துவதில், அரசாங்கம் முழு கவனத்தை செலுத்தி வருவதாக அவர் கூறினார்.
அதே நேரத்தில், நாட்டின் நிதி வளத்தை வலுப்படுத்துவதோடு, உதவித்தொகை வழங்கப்பட்ட டீசலின் விநியோகத்தில் ஏற்படும் கசிவுகளை குறைப்பதிலும் கவனம் செலுத்தப்படுகின்றது.
வருங்காலத்தில், RON95 வகை பெட்ரோலுக்கான உதவித்தொகையிலும் மறுசீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால், அதனால், பாதிக்கப்படக்கூடிய தரப்பினருக்கு, அரசாங்கம் நிச்சயம் ஏற்புடைய உதவிகளை வழங்கும் என நேற்றைய மக்களவைக் கூட்டத்தில் எழுத்துப்பூர்வ பதிலில் ரஃபிஸி அதனைத் தெரிவித்தார்.
இலக்கிடப்பட்ட மக்களுக்கு மட்டுமே உதவித்தொகையை வழங்கும் நடவடிக்கையை அரசாங்கம் எப்போது முழுமையாக அமல்படுத்தப்படும் எனவும் பெட்ரோலுக்கான உதவித்தொகை மறுசீரமைப்பு நடவடிக்கை இவ்வாண்டு அமல்படுத்தப்படுமா? எனவும் பெரிக்காத்தான் நேஷனலைச் சேர்ந்த புத்ரஜயா நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராட்ஸி ஜிடின் முன்னதாக கேள்வியெழுப்பியிருந்தார்.