மூவார் ஜுன் 26-
தனக்கு அறிந்து சில நாட்கள் மட்டுமே ஆகிய மாணவி ஒருவரை காருக்குள் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக ஓர் இந்திய மெக்கானிக் ஒருவர் மூவார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.
37 வயது தீவன் ராஜரெட்ணம் என்ற அந்த இந்திய மெக்கானிக் நீதிபதி அபுபக்கர் மனாத் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அக்குற்றத்தை அவர் ஒப்புக் கொள்ளவில்லை.
குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டுகள் சிறை மற்றும் பிரம்படி விதிக்க குற்றவியல் சட்டம் 14 (d) பிரிவின் கீழ் அந்நபர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
கடந்த ஜூன் 21 ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணியளவில் ஜொகூர்,பத்து பஹாட்டில் உள்ள ஓர் இடத்தில் காருக்குள் 16 வயது மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட அம்மாணவி சமூக ஊடகங்களின் வாயிலாக குற்றச்சாட்டப்பட்டிருக்கும் அந்நபரை அறிந்ததாகவும் வெளியே சென்று சாப்பிடுவதற்கு அவர் அம்மாணவியை வற்புறுத்தியதாகவும் தெரியவந்துள்ளது.
சம்பந்தப்பட்ட மாணவியும் அந்நபரின் அழைப்பை ஏற்று அவருடன் காரில் வெளியே சென்ற வேளை இச்சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகின்றது.