கோலாலம்பூர், ஜூன் 26-
கடந்த பிப்ரவரி மாதத்தில், ஆயுதம் ஏந்தி நான்கு சிகரெட் பெட்டிகளை கொள்ளையடித்ததாக பழ வியாபாரி ஒருவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை மற்றும் ஒரு பிரம்படி விதிக்க கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
35 வயது முஹம்மது அஸ்னில் அப்துல் காதிம் என்ற அந்த பழ வியாபாரி நீதிபதி டத்தின் ஃபட்ஸ்லின் சுரயா முகமட் சுவா முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதை அடுத்து அவருக்கு இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.
குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 14 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் அல்லது பிரம்படி விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 392 மற்றும் 397 ஆவது பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டப்பட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி அதிகாலை 5.20 மணியளவில் கோலாலம்பூர், ஜாலான் செந்துல் – லில் உள்ள ஒரு கடையில் குற்றச்சாட்டப்பட்டிருக்கும் அந்நபர் ஆயுதம் ஏந்தி 63 வெள்ளி 60 காசு மதிப்பிலான Winston 20 வகையை சேர்ந்த நான்கு சிகரெட் பெட்டிகளை கொள்ளையடித்ததாக அவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.