புத்ராஜெயா, ஜூன் 26-
இவ்வாண்டு அக்டோபரில், 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக அரசு ஊழியர்களுக்கான புதிய சம்பள உயர்வு விகிதம் அறிவிக்கப்படும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்து நீண்டகாலமாக எந்தவொரு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று பிரதமர் அன்வார் நினைவுக் கூரிந்தார்.
பல ஆண்டுக்காலமாக கடினமாக உழைக்கும் அரசு ஊழியர்களுக்கு எந்தவொரு வெகுமதியும் இதுவரையில் வழங்கப்படவில்லை. அவர்களின் சேவையை பாராட்டி ஓர் அங்கீகாரம் வழங்கப்படுவதே சரியாகும்.
அரசு ஊழியர்களுக்கான ஒரு நற்செய்தியை அடுத்த ஆண்டு பட்ஜெட் தாக்கலுக்குள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் துறையின் 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த சேவை விருது பாராட்டு விழாவின் போது பேசுகையில் பிரதமர் கூறினார்.
ஆகக் கடைசியாக, கடந்த 2013 ஆம் ஆண்டு அரசு ஊழியர்களுக்கு 13 சதவீதம் சம்பளம் உயர்வு அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த மே 1 ஆம் தேதி அரசு ஊழியர்களின் சம்பளம் குறித்து பரிசீலிக்க விருப்பதாகவும் 13 சதவீதத்திற்கும் அதிகமாக சம்பளத்தை அதிகரிக்க விருப்பதாகவும் பிரதமர் அன்வார் தெரிவித்திருந்தார்.
அதுமட்டுமின்றி, இந்த சம்பள உயர்வு நாட்டின் வரலாற்றில் இதுவரை பதிவு செய்யப்படாத ஒரு எண்ணிக்கையாகும் என்று அவர் குறிப்பிட்டார். மேலும், Malaysia Airports Holdings Bhd நிறுவனத்தின் ஒரு பகுதியை விற்பனை செய்வது தொடர்பாக எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகளுக்கு அரசு ஊழியர்கள் ஆதரவளிக்க வேண்டாம் என்று பிரதமர் அன்வார் கேட்டுக் கொண்டார்.