காஜாங், ஜுன் 27-
காஜாங், காஜாங் உதமாவில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பின் 23 ஆவது மாடியில் கேபிளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்ட இரு சகோதரர்களில் ஒருவர் கீழே தவறி விழுந்து உயிரிழந்த வேளை மற்றொருவர் வெற்றிகரமாக கைது செய்யப்பட்டார்.
நேற்று காலை 8 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 29 க்கும் 31 க்கும் இடைப்பட்ட வயதுடைய அவ்விருவரும் அவ்வளாகத்தில் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாவலர்களால் கண்டறியப்பட்ட வேளை தப்பிச் செல்ல முயற்சித்ததாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் நஸ்ரோன் அப்துல் யூசோப் தெரிவித்தார்.
மேலும், இரு சகோதரர்களில் ஒருவர் தப்பிக்க முயற்சித்து பால்கனி வழியாக அடுத்த கட்டிடத்திற்கு குதித்த போது, தவறி கீழே விழுந்து உயிரிழந்ததாக நஸ்ரோன் அப்துல் கூறினார்.
அவ்விரு நபர்கள் மீது ஏற்கனவே குற்றப்பதிவுகள் இருப்பது விசாரணையில் தெரியவந்த வேளை, இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாக நஸ்ரோன் அப்துல் விளக்கினார்.