பெட்டாலிங் ஜெயா, ஜூன் 29-
நாட்டின் பிரசித்திப்பெற்ற சுற்றுலாத் தளமான லங்காவித் தீவு முஸ்லிம் மக்கள், குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் சுற்றுப்பயணிகளின் இலக்குக்கு உரிய தளமாக மேம்படுத்துவதற்கு தனது துணை அமைச்சர் முன்மொழிந்த பரிந்துரைக்காக சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோ செரி தியோங் கிங் சிங் இன்று பகிரங்க மன்னிப்பு கோரினார்.
கெடா மாநிலத்தில் வீற்றிருக்கும் லங்காவி தீவை முஸ்லிம்களின் தேர்வுக்குரிய சுற்றலாத் தளமாக கொண்டு வருவதற்கு துணை அமைச்சர் கைருல் பிதாஸ் அக்பர் கான் முன்மொழிந்த யோசனைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து அமைச்சர் தியோங் கிங் சிங், தனது துணை அமைச்சர் சார்பாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
தனது துணை அமைச்சர், இவ்விவகாரத்தை நல்ல முறையில் சொல்ல வேண்டிய விதத்தில் கூறவில்லை என்பதுதான் நடப்பு பிரச்னையாகும். அத்தகைய பரிந்துரையை முன்வைத்தற்காக சுற்றுலா, கலை, பண்பாட்டுத்துறை அமைச்சுக்கு பொறுப்பேற்றுள்ள அமைச்சர் என்ற முறையில் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக Tiong King Sing ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்.