பழம்பெரும் அரசியல்வாதிசையத் ஹுசின் அலி காலமானார்

கோலாலம்பூர், ஜூன் 29-

பழம்பெரும் அரசியல்வாதியும், PKR கட்சியின் ஆலோசனை மன்றத்தின் துணைத் தலைவருமான சையத் ஹுசின் அலி காலமானார். அவருக்கு வயது 87.

மூப்பு மற்றும் உடல் சுகவீனம் காரணமாக செலாயாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சையத் ஹுசின் அலி மிக கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக இதற்கு முன்பு அறிவிக்கப்பட்டு இருந்தது.

PRM எனப்படும் பார்ட்டி ராக்யாட் மலேசியாவின் முன்னாள் தேசியத் தலைவருமான சையத் ஹுசின் அலி, 1998 ஆம் ஆண்டு டத்தோஸ்ரீ அன்வார் அம்னோவிலிருந்து நீக்கப்பட்டப் பின்னர் நடைபெற்ற வழக்கில் சிறைச்சாலைக்கு சென்ற பின்னர் PKR கட்சியை தோற்றுவிப்பதில் முக்கியப் பங்காற்றியவர் ஆவார்.

மலாயா பல்கலைக்கழகத்தின் முன்னாள் இணை பேராசிரியரான சையத் ஹுசின் அலி, மலேசிய மக்களின் ஏழ்மை நிலை தொடர்பாக நிறைய போராட்டங்களை மேற்கொண்ட முக்கியத் தலைவர்களில் ஒருவர் ஆவர். மலேசிய மக்களின் வறிய நிலை மற்றும் அவர்களின் சமூகவியல், பொருளாதார மேம்பாடு தொடர்பாக 20 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

அனைத்துலக அரங்கில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். கெடா. சுங்கைப்பட்டாணியில் ஏழை விவசாயிகளின் வறுமை நிலை மற்றும் கோலாலம்பூரில் மாணவர்களின் போராட்டத்தை முன்னெடுத்தற்காக கடந்த 1974 ஆம் ஆண்டு இசா ( ISA ) எனப்படும் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

நீதிமன்ற விசாரணையின்றி சையத் ஹுசின் அலி, சுமார் 6 ஆண்டு காலம் தைப்பிங், கமுண்டிங் சிறைச் சாலையில் தடுத்து வைக்கப்பட்டு, 1980 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.

இன்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தின் முதன்மை உறுப்புக்கட்சியாக விளங்கும் PKR கட்சியை தோற்றுவித்த முக்கிய தலைவர்களில் ஒருவராக சையத் ஹுசின் அலி, விளங்கினார்.

மலேசிய மக்களின் வாழ்வியல் சிந்தனையை தனது உயிர்மூச்சாக கொண்டு, மக்களின் மேன்மைக்காக போராடிய தலைவர்களில் ஒருவராக விளங்கிய சையத் ஹுசின் அலி மறைவு, பேரிழப்பாகும் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS