பெட்டாலிங் ஜெயா, ஜூன் 29-
மூடா கட்சியின் முன்னாள் தலைவரும், மூவார் எம்.பி.யுமான சையத் சாதிக் சையத் அப்துல் ரஹ்மான், தனது நாடாளுமன்றத் தொகுதியில் மக்கள் சேவை மையத்திற்கு நிதி திரட்டுவதற்காக கோலாலம்பூரிலிருந்து ஜோகூர், மூவாருக்கு தனியொரு நபராக நேற்று தொடங்கியுள்ள நெடுந்தூர ஓட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 55 ஆயிரம் வெள்ளியை திரட்டியுள்ளார்.
சையத் சாதிக் , நேற்று வெள்ளிக்கிழமை காலையில் கோலாலம்பூர், நாடாளுமன்ற கட்டடத்திலிருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தூரத்தைக் கொண்ட மூவாருக்கு நெடுந்தூர ஓட்டத்தை தொடங்கினார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு ஆதரவு அளிப்பதை மீட்டுக்கொண்டு, ஒரு சுயேட்சை எம்.பி.யானப் பின்னர் , ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் தனக்கு கூட்டரசு அரசாங்கத்தின் மானிய ஒதுக்கீடு கிடைக்கவில்லை என்று சையிட் சாடிக் கூறுகிறார்.
தொகுதி மக்களை கவனிப்பதற்கு கூட்டரசு அரசாங்கத்திடமிருந்து ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆண்டுக்கு 40 லட்சம் வெள்ளி வீதம் 5 ஆண்டுகளுக்கு 2 கோடி வெள்ளியை கூட்டரசு அரசாங்கம் வழங்குகிறது.
எனினும் தாம் ஒரு சுயேட்சை எம்.பி.யாக அறிவித்துக்கொண்டப் பின்னர் தனக்கு 40 லட்சம் வெள்ளி மானியம் கிடைக்காததைத் தொடர்ந்து மூவார் மக்கள் சேவை மையத்தை வழிநடத்துவதற்கு குறைந்த பட்சம் ஒரு லட்சம் வெள்ளியை திரட்டுவதற்காக சையிட் சாடிக் இந்த நெடுந்தூர ஓட்டத்தை முன்னெடுத்துள்ளார்.
கோலாலம்பூரிலிருந்து சிரம்பானை அடைந்து விட்ட தாம் முதல் கட்டமாக 70 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து விட்டதாக கூறுகிறார். சற்று ஓய்வு எடுத்தப் பின்னர் நாளை மீண்டும் ஓட்டத்தை தொடங்கப் போவதாக தனது முகநூலில் சையிட் சாடிக் குறிப்பிட்டுள்ளார்