ஜார்ஜ் டவுன், ஜுன் 29-
பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லி அறிவித்து இருப்பதைப் போல பெட்ரோலுக்கான உதவித் தொகையை அகற்றுவதற்கு அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் தற்போதைய கவனம் முழுவதும் டீசலாகும். டீசலுக்கான இலக்குக்கு உரிய திட்டம் எத்தகைய ஆக்கப்பூர்வமான விளைவுகளை தந்துள்ளது என்பது குறித்து ஆராய்வதில் அரசாங்கம் முழு கவனம் செலுத்தி வருவதாக அன்வார் குறிப்பிட்டார்.
பெட்ரோல் ரோன் 95 க்கு தற்போது வழங்கப்பட்டு வரும் உதவித் தொகையை அரசாங்கம் அகற்றுவதற்கான சாத்தியம் இருப்பதைப் போல பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லி Bloomberg- கிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருந்தார்.
எனினும் பெட்ரோலுக்கான உதவித் தொகையை அகற்றுவது தொடர்பில் இதுவரையில் அரசாங்கம் எந்தவொரு முடிவும் செய்யவில்லை என்று பிரதமர் தெளிவுபடுத்தினார்.
பெட்ரோல் ரோன் 95, தற்போது லிட்டருக்கு 2 வெள்ளி 05 காசுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.