பென்தோங்- ஜுன் 29-
கெந்திங் ஹைலண்ட்ஸிலிருந்து அடிவாரத்திற்கு இறங்கி கொண்டு இருந்த சுற்றுலா பேருந்து ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதி கவிழ்ந்ததில் சீன நாட்டைச் சேர்ந்த இரு சுற்றுப்பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 19 பேர் உயிர் தப்பினர்.
இச்சம்பவம் இன்று காலை 11 மணியளவில் ஜாலான் கெந்திங் ஹைலேண்ட்ஸ், 16.5 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது. தலையில் பலத்த காயங்களுக்கு ஆளாகி உயிரிழந்த அந்த இரண்டு சீன நாட்டுப் பிரஜைகளின் உடல்கள், பகாங், பென்தோங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன என்று பகாங் மாநில தீயணைப்பு, மீட்புப்படை இயக்குநர் வான் முகமடது ஜைதி வான் இசா தெரிவித்தார்.
அந்த சுற்றுலா பேருந்தில் 21 பயணிகளும், உள்ளூரைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநரும், இரண்டு சுற்றுலா வழிகாட்டிகளும் இருந்துள்ளனர். அந்த மூவரும், 16 சுற்றுப் பயணிகளும் காயம் அடைந்துள்ளனர்.
பேருந்தின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி தவித்த காயமுற்ற 16 சுற்றுப்பயணிகளும், பேருந்து ஓட்டுநர் உட்பட உள்ளூரைச் சேர்ந்த மூவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் விளக்கினார்.