மலேசியர்களின் உரிமைகளைப் பாதுகாத்த கர்ப்பால் சிங்கின் பாரம்பரியம் தொடரப்படும் பிரதமர் அன்வார் உறுதி

ஜார்ஜ் டவுன், ஜுன் 29-

வழக்கறிஞர் மற்றும் அரசியல்வாதி என்று இரு வெவ்வேறு பரிணாமங்களில் நாட்டின் செலுமைக்கு தனது நிறைவான பங்களிப்பை வழங்கிய மூத்த அரசியல்வாதி மறைந்த கர்ப்பால் சிங்கின் தொலைநோக்குப் பார்வைக்கு மதிப்பளித்து ஒவ்வொரு மலேசியரின் உரிமையையும் தமது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் பாதுகாக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று உறுதி அளித்தள்ளார்.

இன்று பினாங்கு, ஜார்ஜ்டவுனில் நடைபெற்ற REMINISCING KARPAL என்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இனவெறி, மதவெறி மற்றும் ஊழலுக்கு எதிராக போராடியவர் ஜெலுத்தோங் சிங்கம் என்று வர்ணிக்கப்பட்ட கார்ப்பால் சிங் ஆவார்.

அந்த உன்னத தலைவரின் பாரம்பரியத்தை தொடர்வதற்கு தமது தலையிலான அரசாங்கம் தொடர்ந்து போராடும் என்று அன்வார் உறுதி அளித்தார்.

மலேசிய நாடாளுமன்ற ஜனநாயகம் இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் நிலையாய் நீடித்திருப்பதற்கு கர்ப்பால் போன்றவர்களின் பங்களிப்பும், தியாகமும் ஈடு இணையற்றவையாகும்.

சட்டமுறைப்படி ஆட்சி செய்தல், நீதித்துறை சுதந்திரம், நாடாளுமன்ற ஜனநாயகம், மனித உரிமைகள் முதலிய உன்னத கோட்பாடுகளை உயரிய பீடத்தில் வைத்து போற்றி பாதுகாத்து வந்தவர் கர்ப்பால் ஆவார்.

தாம் மட்டுமின்றி DAP முன்னாள் ஆலோசகர் லிம் கிட் சியாங் போன்றவர்கள் முதன்மை நோக்கங்களை முன்நிறுத்தி பாடுபட்டோம். மலேசிய ஜனநாயகம் ஒரு முதிர்ச்சி அடைந்த நிலையில் வலுவாக இருப்பதற்கு உறுதி பூண்டு இருந்தோம்.

அந்த வகையில் மலேசியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் உரிமையையும் பாதுகாக்கப்படுவதை எல்லா நிலைகளிலும் நாங்கள் உறுதி செய்வோம். அவர்கள் சிறுபான்மையினரோ அல்லது பெரும்பான்மையினரோ என்ற பேதங்களுக்கு இங்கு இடம் இல்லை என்று பிரதமர் உறுதி அளித்தார்.

இந்த நிகழ்வில் கர்ப்பாலின் இரண்டாவது மகனும் DAP யின் துணைத் தலைவருமான கோபிந்த் சிங் டியோ, பினாங்கு முதலமைச் சர்சோவ் கோன் இயோவ், கர்ப்பாலின் இதர மகனான ராம் கர்ப்பால் சிங் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இன்றைக்கு நாம் முதிர்ச்சியடைந்த ஜனநாயக சூழ்நிலையில் வாழ்வதற்கும், நம்மைப் பிணையாகப் பிடித்திருந்த பல நாடாளுமன்றச் சட்டங்கள் வீழ்வதற்கும் முக்கிய காரணம், கர்ப்பால் போன்றவர்கள் காலமெல்லாம் விடாது நடத்திய போராட்டங்களே என்பதை நாம் மறந்து விடக்கூடாது என்று நிகழ்வில் பேசிய இதர தலைவர்கள் புகழாரம் சூட்டினர்.

WATCH OUR LATEST NEWS