HRD Corp. தலைமை செயல்முறை அதிகாரிநியமிக்கும் அதிகாரம் இயக்குநர் வாரியத்திடமே வழங்கப்பட வேண்டும்

கோலாலம்பூர், ஜூலை 6-

மனித வள அமைச்சின் கீழ் உள்ள மனித வள மேம்பாட்டுக்கழகமான HRD Corp. பில் நிகழ்ந்ததாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM, தனது விசாரணையை தொடங்கியுள்ளது.

அதேவேளையில் HRD Corp.பை நிர்வகிப்பதற்கு தலைமை பொறுப்பை ஏற்றுயிருக்கும் தலைமை செயல்முறை அதிகாரியை நியமிக்கும் அதிகாரம், அதன் இயக்குநர் வாரியத்திடமே வழங்கப்பட வேண்டும் என்று FMM எனப்படும் மலேசிய தயாரிப்பாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

HRD Corp.பின் தலைமை செயல்முறை அதிகாரியை நியமிக்கும் அதிகாரத்தை தற்போது அரசாங்கம் அல்லது மனித வள அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை மாற்றப்படுவதற்கு ஏதுவாக HRD Corp. சட்டம் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று அந்த சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

HRD Corp. மீது பொதுக் கணக்குக் குழுவும், தேசிய கணக்காய்வுத்துறையும் நடத்திய ஆய்வில் அந்த மனித வள மேம்பாட்டுக்கழகத்தின் நிர்வாகத்தில் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதற்கான சாத்தியத்தை அம்பலப்படுத்தியுள்ளன.

இதனைத் தொடர்ந்து HRD Corp. நிர்வாகம் தற்போது SPRM விசாரணைக்கு இலக்காகியுள்ளது. HRD Corp. நிர்வாகத்தில் பலவீனங்கள் இருப்பதை தேசிய கணக்குத் தணிக்கை இலாகா நேற்று முன்தினம் வியாழக்கிழமை அம்பலப்படுத்தியிருந்தது.

மனித வளமேம்பாட்டு நிதியின் ஒரே பாதுகாவலராக இருந்து வரும் HRD Corp.ப்பின் நிர்வாகத்தை மேம்படுத்த உறுதியான மற்றும் விரைவான நடவடிக்கை தேவை என்று அந்த சம்மேளனத்தின் தலைவர் ஷோ தியான் லாய் கேட்டுக்கொண்டுள்ளார்.

HRD Corp. நிகழ்ந்ததாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் SPRM- மிடம் புகார் அளிக்கும்படி மனித வள அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ கைருல் டிசைமி டாட் மற்றும் HRD Corp. நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி ஷாகுல் ஹமீது தாவூத் ஆகியோருக்கு மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் உத்தரவிட்டுள்ளார்.

HRD Corp.ப்பில் நிகழ்ந்ததாக கூறப்படும் எந்தவொரு சட்டமீறலையும் மனித வள அமைச்சு சகித்துக்கொள்ளாது என்று அமைச்சர் ஸ்டீவன் சிம் நினைவுறுத்தியிருந்தார்.

WATCH OUR LATEST NEWS