கோலாலம்பூர், ஜூலை 6-
மனித வள அமைச்சின் கீழ் இயங்கும் மனிதவள மேம்பாட்டுக்கழகமான HRD Corp. பிற்கு சொந்தமான 15 லடசம் வெள்ளி, பேரா, தாப்பாவில் மூன்று லாட் கடைகளை வாங்குவதற்கு பயன்படுத்தப்பட்டு இருக்கக்கூடும் என்று PAC எனப்படும் பொது கணக்குழு உறுப்பினர் சிம் டிஸே சின் தெரிவித்துள்ளார்.
பொதுக்கணக்கு குழுவின் விசாரணைக்கு ஆளாகிய HRD Corp. நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி ஷாகுல் ஹமீத் ஷேக் Dawood,டிடம் நடத்தப்பட்ட விசாரணையில் Bayan Lepas Baru, PKR நாடாளுமன்ற உறுப்பினரான சிம் டிஸே சின் இந்த கேள்வியை தொடுத்துள்ளார்.
HRD Corp. பணத்தை பயன்படுத்தி, சமூக மையம் ஒன்றை சீர்படுத்துவதற்கு எதற்காக தாப்பா தொகுதியை தேர்வு செய்தீர்கள் என்று பொது கணக்குக்குழு உறுப்பினர் Sim எழுப்பிய கேள்விக்கு தொடர்ந்து பதில் அளித்த ஷாகுல் ஹமீத், அன்றைய மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் அந்த இடத்தை தேர்வு செய்தோம் என்றார்.
Orang Asli பிள்ளைகள் தங்கள் வீடுகளில் கற்றல், கற்பித்தலுக்கு இணைய வசதி இல்லாததால், தாப்பா தொகுதியில் சமூக மையத்தை சீர்படுத்தி, Orang Asli பிள்ளைகளுக்கு வசதியை ஏற்படுத்துவதற்காக 15 லட்சம் வெள்ளி செலவில் அந்த சமூக மையத்தை சீர்படுத்தினோம் என்று ஷாகுல் ஹமிட் பதில் அளித்தார்.
இந்த 15 லட்சம் வெள்ளியை ஒரு சமூக மையத்தை சீர்படுத்துவதற்கு மட்டும் பயன்படுத்தியிருக்க முடியாது. தாப்பாவில் 3 கடைகளை வாங்குவதற்கு பயன்படுத்தப்பட்டு இருக்கக்கூடும் என்று சிம் வாதிட்டார்.
உண்மையிலேயே Orang Asli பிள்ளைகள் இணைய வசதியை பெறுவதற்கு ஒரு சமுக மையத்தை சீர்படுத்தி தர வேண்டும் என்ற நோக்கத்தை HRD Corp. கொண்டிருக்குமானால் ஓராங் அஸ்லிகள் அதிகமாக வசிக்கும் Tanjong Malim-மிலோ அல்லது கேமரன்மலையிலோ செய்து இருக்கலாமே….. ஏன் அப்படிப்பட்ட பகுதிகளை தேர்வு செய்யவில்லை என்று சிம் எழுப்பிய மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த ஷாகுல் ஹமிட், HRD Corp. பட்ஜெட் அனுமதித்தால் எதிர்காலத்தில் ந்த இடங்களில் செய்யப்படும் என்றார்.
எனினும் சமூக மையம் சீர்படுத்தப்படுவதற்கு தாப்பாவை தேர்வு செய்தற்கு முக்கிய காரணம், அது பொதுத் தேர்தல் நோக்கத்தை கொண்டது என்பதை HRD Corp. செயலாக்க தலைமை அதிகாரி அரிஃப் ஃபர்ஹான் டோஸ், பொதுக் கணக்கு குழுவிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அந்த கட்டடத்தை சீர்படுத்தி முடிப்பதற்கு தமக்கு 6 மாத கால அவகாசம் வழங்கப்பட்டதாகவும், பொதுத் தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு அதனை அமைச்சர் திறந்து வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததாக அரிஃப் ஃபர்ஹான் தெரிவித்தார்.
முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாக கூறப்படும் HRD Corp, தற்போது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM விசாரணையில் சிக்கியுள்ள வேளையில் இதற்கு முன்பு, பொது கணக்குக்குழுவின் விசாரணைக்கு இழுக்கப்பட்டுள்ள HRD Corp. பொறுப்பாளர்கள், தங்கள் விசாரணையின் போது எத்தகையை பதிலை அளித்துள்ளார்கள் என்பதை பொது கணக்குக்குழு வெளியிட்டுள்ளது.