ஈஷா தற்கொலை சம்பவம் தொடர்பில் பிடிபட்ட பெண்ணுக்கு 3 நாள் தடுப்புக்காவல்

டிக் டாக் சமூக ஊடகத்தில் இணைய பகடிவதை மற்றும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி, தற்கொலை செய்து கொண்ட ஈஷா என்ற ராஜேஸ்வரி மரணம் தொடர்பில் பிடிபட்டுள்ள 35 வயதுடைய இந்தியப் பெண்ணுக்கு மூன்று நாள் தடுப்புக்காவல் அனுமதி பெறப்பட்டுள்ளது.

இன்று திங்கட்கிழமை, அதிகாலை 1.45 மணியளவில் சிலாங்கூர், ரவாங், புக்கிட் பெருந்துங் கோல்ப் ரேசோர்ட், ஜாலான் செம்பாக 2 இல் பிடிபட்ட அந்தப் பெண்ணை, விசாரணைக்கு ஏதுவாக இன்று ஜுலை 8 ஆம் தேதி முதல் வரும் 10ஆம் தேதி வரை மூன்று தினங்களுக்கு தடுத்து வைப்பதற்கு நீதிமன்ற அனுமதி பெறப்பட்டள்ளதாக செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிப் அஹ்மத் சுகர்னோ மோஹட் சஹாரி தெரிவித்துள்ளார்.

ஈஷாவை அவமானப்படுத்துவதற்கு அந்தப் பெண், டூலால் பிரோதெரஸ் மற்றும் டிக் டொக் Alphaquinnsha என்ற இரண்டு டிக் டாக் கணக்குகளை பயன்படுத்தி வந்ததும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

தனக்கு எதிராக அவதூறாகவும், அபாசமாகவும் பேசி டிக் டாக்கில் வெளியிடப்பட்ட காணொளியினால் அவமானத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளானதாக கூறப்படும் கோலாலம்பூர், கோம்பாக் செத்யா – வைச் சேர்ந்த 29 வயதுடைய ஈஷா என்ற ராஜேஸ்வரி கடந்த வெள்ளிக்கிழமை தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

குறிப்பிட்டத் தரப்பினருக்கு மன உளைச்சலை அல்லது வெறுப்புணர்வை ஏற்படத்தக்கூடிய தன்மையிலான காணொளிகளை டிக் டாக்கில் விருப்பம் போல் பதிவேற்றம் செய்வதை பொதுமக்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று ஏசிப் அஹ்மத் சுகர்னோ கேட்டுக்கொண்டர்.

அதேவேளையில் ஈஷா மரணம் தொடர்பில் அல்லது பிடிபட்டுள்ள 35 வயது பெண் தொடர்பில் தகவல் கொண்டு இருப்பவர்கள் 010- 9093726 என்ற தொலைபேசி எண்ணில் விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் குமரன் கிருஷ்ணன் அல்லது 03-40482222 என்ற தொலைபேசி எண்ணில் செந்தூல் போலீஸ் தலைமையத்துடன் தொடர்பு கொள்ளுமாறு ஏசிப் அஹ்மத் சுகர்னோ கேட்டுக்கொண்டார்.

WATCH OUR LATEST NEWS