கோலாலம்பூர்,ஜூலை 14-
கோலாலம்பூர் புக்கிட் பிந்தாங் சுற்றுப்பகுதியில் உள்ள ஐந்து உடம்புப்பிடி மையங்களின் மீது குடிநுழைவுத் துறையினர் மேற்கொண்ட அதிரடி சோதனையில் , 56 அந்நிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சரியான ஆவணங்களை கொண்டிருக்காதது, வழங்கப்பட்ட அவகாசத்தை காட்டிலும் நாட்டில் சட்டவிரோதமாக நீண்ட நாள் தங்கியது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக அவர்கள் கைதாகியதாக குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோ ருஸ்லின் ஜூசோ தெரிவித்தார்.
அவர்களுக்கு வீட்டை வாடகையும், அந்த வளாகங்களை கண்காணித்து வந்த இரு உள்நாட்டவர்களும் தடுத்து வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.
கைதான 20 முதல் 50 வயதுக்குட்பட்ட அவர்கள் அனைவரும் வங்காளதேசம், மியன்மார், தாய்லாந்து, சூடான் முதலிய நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர்.
சம்பந்தப்பட்ட வளாகங்களில் உடம்புப்பிடி சேவை மையம் என்ற போர்வையில் முறையற்ற நடவடிக்கைகள் நடப்பதாக பொது மக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற புகாரை தொடர்ந்து அந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
குறுகலான சாலை, போக்குவரத்து நெரிசல், சுற்றுப்பயணிகளின் படையெடுப்பு என தலைநகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் அந்த வளாகங்களை சோதனையிடுவதில் சில சவால்களை எதிர்நோக்கியதாக டத்தோ ருஸ்லின் ஜூசோ குறிப்பிட்டார்.