துப்பாக்கி, தோட்டாக்களுடன் ஆடவர் கைது

அலோர் ஸ்டார்,ஜூலை 16-

கடந்த ஞாயிற்றுக்கிழமை, அலோர் ஸ்டார், தாமன் லாம் ஃபுங் என்ற இடத்தில் ஆடவர் ஒருவர் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் பிடிபட்டார்.

அந்த ஆடவரை வளைத்துத்பிடித்தது மூலம் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகள் அம்பலமானதாக கெடா மாநில போலீஸ் தலைவர் டத்தோ பிசோல் சாலே தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட வீடமைப்புப்பகுதியில் குற்றச்செயல்களை தடுப்பதற்காக போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்த போது 52 வயதுடைய அந்த சந்தேகப் பேர்வழியை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அந்நபரிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவரின் காற்சட்டை பாக்கெட்டிலிருந்து துப்பாக்கி மற்றும் 48 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அந்த நபர் அளித்த வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு அன்றிரவு அதே வீடமைப்புப்பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டதில் 65 வயதுடைய மேலும் ஒரு நபர் கைது செய்யப்பட்டதாக டத்தோ பிசோல் தெரிவித்தார்.

அந்நபர் கொடுத்த தகவலைத் தொடர்ந்து 62 பாக்கெட்டுகளில் Ketamin போதைப்பொருளும், போதை மாத்திரைகள் மற்றும் இதர வகையான போதைப்பொருள் என ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 789 வெள்ளி மதிப்புடைய போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன.

அலோர் ஸ்டாரில் உள்ள கெடா மாநில போலீஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ பிசோல் இதனை தெரிவித்தார். .

WATCH OUR LATEST NEWS