தங்சோங் மாலிம் , ஜூலை 16-
தங்சோங் மாலிம், சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் மாணவியான 25 வயது நூர் ஃபரா கர்தினி அப்துல்லா கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள தனது உறுப்பினரை அரச மலேசிய போலீஸ் படை தற்காக்காது என்று அதன் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
இந்த கொலை தொடர்பில் போலீஸ்காரர் கைது செய்யப்பட்ட போதிலும் போலீசார் மேற்கொள்ளக்கூடிய அனைத்து விசாரணையும் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் இருக்கும் என்று ஐஜிபி உறுதி அளித்துள்ளார்.
போலீஸ் படை உறுப்பினர்கள் தங்கள் பொறுப்பை ஏற்பதற்கு சத்தியப் பிரமாணம் எடுத்துக்கொள்ளும்போது, பொது மக்களுக்கு சேவையாற்றவும், சட்டத்தை அமல்படுத்தவும் உறுதிமொழி எடுத்துக்கொள்கின்றனர். அதனை மீறுகின்ற எவரையும் போலீஸ் படை தற்காக்காது என்று டான்ஸ்ரீ ரஸாருதீன் திட்டவட்டமாக தெரிவித்தார்.