
கூலாய், ஜூலை 16-
கடந்தாண்டு கூலாய் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் 18 ஆலயங்களுக்கும், இந்திய அரசு சாரா இயக்கங்களுக்கும் மொத்தம் 97 ஆயிரம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், தொடர்புத்துறை துணை அமைச்சருமான தியோ நீ சிங் தெரிவித்துள்ளார்.
முழுமையான ஆவணங்கள் மற்றும் விண்ணப்பங்கள் கூலாய் தொகுதி அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட பின்னர், அவை அங்கீகரிக்கப்பட்டதாக தியோ குறிப்பிட்டார்.

கூலாய் தொகுதியின் கீழ் பதிவு பெற்ற ஆலயங்கள் முறையான ஒதுக்கீட்டைப் பெற, விண்ணப்பங்களைக் கூலாய் நாடாளுமன்ற மக்கள் சேவை மையத்தில் சமர்பிக்கலாம் என்றார் அவர்.
முன்னதாக, ஜோகூர், கூலாயில் இருக்கும் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற வருடாந்த உற்சவத்தில் கலந்து சிறப்பித்து, நன்கொடையாக 5 ஆயிரம் வெள்ளியை வழங்கினார்.
வழங்கப்பட்ட இந்த உதவி நிதி, ஆலய வருடாந்திர பிரார்த்தனை சிறப்பாக நடைபெற உதவும் என தாம் நம்புவதாக தியோ குறிப்பிட்டார்.
2023 -இல் இக்கோவிலுக்கு வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சின் ஒதுக்கீட்டில் 96 ஆயிரம் வெள்ளி உதவி நிதி கிடைத்துள்ளதையும் தியோ சுட்டிக் காட்டினார்.
