கோலாலம்பூர், ஜூலை 16-
இணைய பகடிவதைக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட ராஜேஸ்வரி அப்பாஹு மரணத்தை விவாதப்பொருளாக்கி, சிலருடன் நேரலையாக டிக் டாக்கில் விவாதித்த சமயப் போதகர் ஜம்ரி விநோத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று DAP- யைச் சேர்ந்த ஜெலுடோங் எம்.பி. RSN ராயர் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
30 வயது ராஜேஸ்வரி மரணம் தொடர்பில் செந்தூல் மாவட்ட போலீசார் சில நபர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தமது மகளின் மரணம் தொடர்பில் டிக் டாக்கில் விவாதித்து வரும் சில தனி நபர்களுக்கு எதிராக உயிரிழந்த பெண்ணின் தாயாரான புஷ்பா ராஜகோபால் என்பவர் போலீசில் புகார் செய்துள்ளார்.
ராஜேஸ்வரியின் மரணம், இன்னமும் விசாரணையில் இருந்து வரும் நிலையில் அவரின் மரணத்திற்கு யார் காரணம், யார் மீது தவறு என்று ஜம்ரி விநோத், டிக் டாக்கில் நேரடியாக விவாதித்து வருவது கண்டிக்கத்தக்கதாகும். அவர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சை RSN ராயர் கேட்டுக்கொண்டார்.
RSN ராயர்-ரின் இந்த கோரிக்கை தொடர்பில் நாடாளுமன்றத்தில் பதில் அளித்த சட்டத்துறை துணை அமைச்சர் M. குலசேகரன், RSN ராயர்-ரின் இந்த பரிந்துரையை தாம் ஆதரிப்பதாக குறிப்பிட்டார்.
சர்ச்சைக்குரிய விவகாரங்கள் குறித்து அடிக்கடி காணொளி வெளியிட்டு பேசி வரும் ஜம்ரி விநோத், / ராஜேஸ்வரி மரணம் தொடர்பில் பகிரங்கமாக பேசியது தொடர்பில் அரச மலேசிய போலீஸ் படை விரைந்து விசாரணை செய்து, அவரை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று தாம் பரிந்துரைப்பதாக துணை அமைச்சர் எம். குலசேகரன் தெரிவித்தார்.