சிறு குற்றங்களுக்கான 1955 ஆம் ஆண்டு சட்டம் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும்

கோலாலம்பூர், ஜூலை 17-

இணைய பகடிவதைக்கு ஆளாகி உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு ஒரு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு காரணமாக இருந்த ஒரு பெண்ணுக்கு தண்டனையாக வெறும் 100 வெள்ளி அபராதம் விதித்து இருக்கும் கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் முடிவு பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளையில் மளிகைக் கடையில் மதுபானத்தையும்,ரொக்கத் பணத்தையும் கொள்ளையிட்ட குற்றத்திற்காக அடுத்த மாதம் மணமேடை காணவிருக்கும் ஓர் இளைஞருக்கு தெலுக் இந்தான் செஷன்ஸ் நீதிமன்றம் 4 ஆண்டு சிறையும், பிரம்படித் தண்டனையும் விதித்து இருப்பது மற்றொரு அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

இரு குற்றவியல் சம்பவங்களுக்கும் குற்றஞ்சாட்டப்பட்டவரை தண்டிப்பதற்கு பயன்படுத்தப்பட்டு இருப்பது ஒரே சட்டமாகும். ஆனால் மாறுப்பட்ட தண்டனைகள் அளிக்கப்பட்டு இருக்கின்றன.

ஒருவருக்கு 100 வெள்ளி அபராதம், மற்றொருவருக்கு 4 ஆண்டு சிறையாகும். இந்த மாறுப்பட்ட தண்டனையை வழங்குவதற்கு பயன்படுத்தப்பட்ட ஒரே சட்டமான
1955 ஆம் ஆண்டு சிறு குற்றங்களுக்கான சட்டப்பிரிவு 14 இல் உள்ள பலவீனங்கள் இதன் மூலம் தெளிவாக தெரிகிறது என்று Dinamik Sinar Kasih Malaysia சமூக இயக்கத்தின் தலைவர் டத்தோ N. சிவகுமார் தெரிவித்துள்ளார்.

மேற்கண்ட சட்டத்தில் உள்ள பலவீனங்களை களைவதற்கு அச்சட்டம் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சட்டத்துறை அலுவலகத்தினர், பத்திரிகை வாயிலாக தங்கள் கருத்துகளை தெரிவித்து இருந்ததாக டத்தோ சிவகுமார் சுட்டிக்காட்டினார்.

ஆனால், அந்த சட்டத்தில் உள்ள பலவீனங்களை களைவதற்கு இது வரையில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாதது பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாகவே ஒருவரின் உயிர் பறிக்கப்பட்ட சம்பவத்திற்கு காரணமாக இருந்த நபரை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டுவதற்கு கடந்த எட்டு ஆண்டு காலமாக திருத்தப்படாத ஒரு பலவீனமான சட்டத்தை பயன்படுத்தப்பட்டதன் விளைவாக வெறும் 100 வெள்ளியை மட்டுமே அபராதத் தொகையாக நீதிமன்றத்தினால் விதிக்க முடிந்தது என்று டத்தோ சிவகுமார் சுட்டிக்காட்டினார்.

ஒருவர் உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு பகடிவதை செய்யும் நபருக்கு 100 வெள்ளி மட்டுமே அபராதம் விதிக்க முடியும் என்றால் தனது பாக்கெட்டில் 100 வெள்ளி வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் மற்றவரை நிந்திக்கும் அளவிற்கு சமூக வலைத்தளங்களில் துணிந்து பகடிவதை செய்ய முடியும் என்ற நிலையை இச்சட்டம் உருவாக்கியுள்ளது.

மிக பலவீனமான, அப்படியொரு சட்டம் நாட்டிற்கு இன்னமும் தேவையா? என்று டத்தோ சிவகுமார் கேள்வி எழுப்பினார்.

எனவே 1955 ஆம் ஆண்டு சிறு குற்றங்களுக்கான சட்டப்பிரிவு 14 இல் உள்ள பலவீனங்களை களைவதற்கு அந்த சட்டம் உடனடியாக திருத்தப்பட வேண்டும் என்று அரசாங்கத்தை டத்தோ சிவகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS