
நாளை ஜுலை 20 ஆம் தேதி சனிக்கிழமை நாட்டின் 17 ஆவது மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் முடிசூட்டு விழா நடைபெறுகிறது. மாட்சிமை தங்கிய மாமன்னரின் முடிசூட்டு விழாவையொட்டி நாடெங்கும் விழா கோலம் பூண்டிருக்கிறது.
ஜோகூர் சுல்தானான, சுல்தான் இப்ராஹிமின் முடிசூட்டு விழா காலை 10.00 மணிக்கு இஸ்தானா நெகாராவில் தொடங்குகிறது. இஸ்தானா நெகாராவின் பிரதான சிம்மாசன அறையில் உள்ள ஏழு அடுக்கு மேடை மீது முடிசூட்டு விழா நடைபெறவிருக்கிறது.
இந்த முடிசூட்டு விழாவையொட்டி நாட்டின் தலைநகரான கோலாலம்பூர் மிகச்சிறப்பாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. மாநகர் முழுவதும் கொடிகளாலும் வண்ண விளக்கு தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. சுமார் 60 ஆயிரம் விளக்குகள் தோரணமாகத் தொங்குகின்றன.
தலைநகரின் முக்கிய சாலைகளில் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. மாமன்னர் வாழ்க எனக் கூறும் தோரணங்களையும், தேசியக் கொடியினையும் அரசாங்க கட்டங்களிலும் வணிகத் தளங்களிலும் காணமுடிகிறது.
மாமன்னரின் அரியணை அமர்வு விழாவில் கலந்து கொள்வதற்காக புருணை சுல்தான், Sultan Hassanal Bolkiah உட்பட வெளிநாட்டு பிரமுகர்கள் வருகைத் தரத் தொடங்கியுள்ளனர்.
அரியணை அமர்வு விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒரு பகுதியாக மலேசிய இராணுவப்படையின் 3 சேவைப் பிரிவுகளின் பாரம்பரியம் நிறைந்த இராணுவச் சடங்குகள் நடைபெறவிருக்கின்றன.
இராணுவப் படையின் உயர்நிலை ஆட்சியாளராக மாமன்னர் விளங்குகிறார். நாட்டின் தற்காப்பு படை, அதன் விசுவாசத்தின் அடையாளவுமாக அச்சடங்கின் முதன்மை அம்சமாக இராணுவச் சடங்குகள் இடம் பெறவிருக்கின்றன.
மாமன்னரின் முடிசூட்டு விழாவின் இந்த வரலாற்றுப்பூர்வமான வைபவம், தொலைக்காட்சி மற்றும் இதர அதிகாரத்துவ மின்னியல் ஊடகங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.