ஷா அலாம், ஜூலை 22-
நாட்டின் சிக்கன கட்டண விமான நிறுவனமான ஏர் ஆசியாவின் விமானப் பயணம் தாமதமாகி, பல முறை ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த விமான நிறுவனத்தை முன்னாள் போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் சாடினார்.
நேற்று முன்தினம் சனிக்கிழமை சபா, கோத்தா கினபாலுவிலிருந்து சண்டக்கானுக்கு தாம் மேற்கொள்ளவிருந்த ஏர் ஆசியாவின் விமானப் பயணம் ஐந்து முறை ஒத்திவைக்கப்பட்டது குறித்து மசீச தலைவரான வீ கா சியோங் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த ஜுலை 20 ஆம் தேதி காலை 8 மணியளவில் பயணம் மேற்கொள்வதற்கு தாம் தயாராக இருந்த போது, அந்தப் பயணம் மாலை 5.55 மணிக்கு ஒத்திவைக்கப்படுவதாக ஏர் ஆசியா குறுந்தகவல் அனுப்பியிருந்தது.
கோத்தா கினாபாலுவில் லே மெரிடியன் ஹோட்டலிருந்து விமான நிலையத்தை நோக்கி தாம் புறப்பட்ட வேளையில் அதே தினத்தன்று விமானப் பயணம் இரவு 11.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
பின்னர் அந்தப் பயணம் மறுநாள் ஜுலை 21 ஆம் தேதி அதிகாலை 2.10 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இரவில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் மறுபடியும் அந்தப் பயணம் சற்று முன்கூட்டியே அதிகாலை 1.30 மணிக்கு மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் அந்தப் பயணம் பிற்பகல் 3.10 மணிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
இவற்றுக்கு மத்தியில் ஒரு முட்டாளைப் போல் அந்த விமானப் பயணத்திற்காக தாம் காத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக முன்னாள் போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் தமது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.