நஜீப்,இர்வான் விண்ணப்பம் நிராகரிப்பு

கோலாலம்பூர், ஜூலை 22-

PIC எனப்படும் International Petroleum Investment Company நிறுவனத்திடம் வழங்கப்படவிருந்த 606 கோடி வெள்ளியை நம்பிக்கை மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்த வழக்கிலிருந்து தங்களை தற்காலிகமாக விடுவிக்குமாறு முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கும், தேசிய கருவூல முன்னாள் தலைமைச் செயலாளர் இர்வான் செரிகார் அப்துல்லா-வும் செய்து கொண்ட விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்தது.

அவ்விருவரின் விண்ணப்பங்களை நிராகரிப்பதாக உயர் நீதிமன்ற நீதிபதி முஹம்மது ஜமில் ஹுசின் அறிவித்தார். இதன் தொடர்பில் வரும் நவம்பர் 14 ஆம் தேதி நடைபெறும் வழக்கு விசாரணைக்குத் தயாராகும்படி இருவருக்கும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

வழக்கு விசாரணையில் பயன்படுத்தப்படவிருக்கும் ஆவணங்களை பிராசிகியூஷன் தரப்பினர், தங்களிடம் இன்னும் முழுமையாக ஒப்படைக்கவில்லை என்று தற்காப்பு வழக்கறிஞர்கள் இருவரும் கூறினர்.

இதனைத் தொடர்ந்து நவம்பர் மாதம் வழக்கு நடைபெறுவதற்கு முன்னதாக அந்த முக்கிய ஆவணங்களை நஜீப் மற்றும் இர்வான் வழக்கறிஞர்களிடம் ஒப்படைக்குமாறு நீதிபதி ஜமில் ஹுசின் உத்தரவிட்டார்.

IPIC செலுத்தப்பட இருந்த பொது நிதியை கையாடியதாக நஜீப் மற்றும் இர்வான் மீது கடந்த 2018 ஆம் ஆண்டு நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

WATCH OUR LATEST NEWS