அந்த குற்றச்சாட்டை உள்துறை அமைச்சு ஆராயும்

கோலாலம்பூர், ஜூலை 23-

தென் கிழக்காசியாவில் பயணம் மேற்கொள்வதற்கு மிக ஆபத்தான ஐந்து முக்கிய நகரங்களில் கோலாலம்பூரும் ஒன்றாகும் என்று முத்திரைக் குத்தியிருக்கும் FORBES ADVISOR அறிக்கையின் உள்ளடக்கத்தை உள்துறை ஆராயும் என்று அதன் அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

உலகிலேயே மிக அமைதியான நாடாக மலேசியாவை பத்தாவது இடத்தில் வைத்திருக்கும் 2024 ஆம் ஆண்டுக்கான உலக அமைதி குறியீட்டு அறிக்கைக்கு எதிராக FORBES ADVISOR அறிக்கையின் உள்ளடக்கம் உள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

FORBES ADVISOR அறிக்கையின் உள்ளடக்கத்தை தாம் மறுப்பதாக சொல்லவில்லை. ஆனால், அந்த அறிக்கையின் உள்ளடக்கத் தன்மையை ஆராய வேண்டியுள்ளது என்று இன்று செவ்வாய்க்கிழமை புத்ராஜெயாவில் நடைபெற்ற உள்துறை அமைச்சின் மாதாந்திர பேரணிக் கூட்டத்தில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார்.

அமெரிக்க மக்களின் வெளிநாட்டுப் பயணத்திற்கு அவர்கள் எடுக்கக்கூடிய காப்புறுதி பாதுகாப்பை அடிப்படையாக கொண்டு 60 நாடுகள் குறித்து விரிவான ஆய்வை மேற்கொண்டுள்ள FORBES ADVISOR, கோலாலம்பூர் மாநகர், பயணம் மேற்கொள்வதற்கு ஆபத்தான ஐந்து முக்கிய நகரங்களில் ஒன்றாக வகைப்படுத்தியுள்ளது.

WATCH OUR LATEST NEWS