கோலாலம்பூர், ஜூலை 23-
கோலாலம்பூர் மாநகரில் அந்நிய நாட்டு வியாபாரிகளுக்கு இடையூறு விளைவிக்காமல், அவர்களின் வியாபாரத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் பொருட்டு மாதம் தோறும் லஞ்சம் பெற்று வந்ததாக நம்பப்படும் ஊராட்சி மன்றத்தைச் சேர்ந்த எட்டு அமலாக்க அதிகாரிகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM கைது செய்துள்ளது.
இவர்கள் அனைவரும் இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, விசாரணைக்கு ஏதுவாக தடுப்புக்காவல் அனுமதியை SPRM பெற்றுள்ளது.
கோலாலம்பூர் மாநகரின் மையப்பகுதியில் AliBaba வர்த்தக உரிமத்தைப் பயன்படுத்தி அந்நிய நாட்டவர்கள் வியாபாரம் செய்வதற்கு மாதம் தோறும் சராசரி 12 ஆயிரம் வெள்ளி வரையில் இவர்கள் லஞ்சம் பெற்று வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த அமலாக்க அதிகாரிகளின் நடவடிக்கைகளை கடந்த ஆறு மாத காலமாக அணுக்கமாக கண்காணித்து, உளவுத்தகவலை சேரித்து வந்த மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM , இந்த எட்டுப்பேரையும் வளைத்துப்பிடித்துள்ளது.
கோலாலம்பூர் மாநகரில் ஒரு வர்த்தகப்பகுதியில் லஞ்சம் கேட்கும் வழக்கமான நடவடிக்கையின் போது இவர்கள் கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர். SPRM மேற்கொண்ட Op Orange என்ற நடவடிக்கையின் போது 30 க்கும் 40 க்கும் இடைப்பட்ட வயதுடைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு எதிரான கைது வேட்டை காலை 8.30 மணி முதல் 11 மணி வரை நடைபெற்றதாக தெரிகிறது. மாநகரில் விபாபாரம் செய்யும் அந்நிய வியாபாரிகளிடம் மாதம் தோறும் 200 வெள்ளி முதல் ஆயிரம் வெள்ளி வரையில் லஞ்சமாக பெற்று வந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.