டெமர்லோ, ஜூலை 23-
நாட்டின் முன்னணி ஆலயங்களில் ஒன்றான மாரான், ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலய நிர்வாகத்தில் பல்வேறு குளறுபடிகளுக்கு காரணமானவர் என்று ஆலய உறுப்பினர்களால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நடப்புத் தலைவர் டத்தோ தமிழ்ச்செல்வன் கந்தசாமி, அந்த பழமை வாய்ந்த ஆலயத்தின் எந்தவொரு பொருளையோ அல்லது சொத்தையே எடுக்கவோ, நகர்த்தவோ கூடாது என்று பகாங், தெமர்லோ உயர் நீதிமன்றம் ஓர் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதேவேளையில் ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலயத்தின் தலைவர் தேர்தலில் வெற்றிப்பெற்ற அதன் முன்னாள் தலைவர் ராமன் பழனியப்பனின் வெற்றியை ஆலயத்தின் தேர்தல் அதிகாரிகள் உறுதி செய்து, வெற்றியை அறிவிக்க வேண்டும் என்று தெமர்லோ உயர் நீதிமன்ற நீதிபதி Roslan Mat Nor கடந்த ஜுலை 19 ஆம் தேதி வழங்கிய எழுத்துப்பூர்வமான இடைக்கால உத்தரவில் பிறப்பித்துள்ளார். .
தலைவர் தேர்தலுக்கு அப்பாற்பட்ட நிலையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள ஆலய நிர்வாகத்தின் துணைத் தலைவர், செயலாளர், துணைத் செயலாளர், பொருளாளர், துணைப்பொருளாளர் மற்றும் 19 நிர்வாக உறுப்பினர்களுகான தேர்தல், ராமனின் தலைமையில் ஒரு சிறப்புக்கூட்டத்தின் வாயிலாக நடத்தப்பட வேண்டும் என்று நீதிமன்றம் ஆணைப் பிறப்பித்துள்ளது.
குறிப்பாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் சிறப்புக்கூட்டம், / கூட்டப்பட்டு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தவிர, நடப்புத் தலைவர் டத்தோ தமிழ்ச்செல்வன் கந்தசாமி அல்லது அவரது ஏஜெண்டு அல்லது அவரின் பிரதிநிதி யாரும் ஆலயப் பொறுப்பாளர்கள் என்று கூறிக்கொண்டு ஆலய நிர்வாகத்தில் தலையிடுவதற்கோ, இடையூறு விளைவிப்பதற்கோ முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி Roslan Mat Nor உத்தரவிட்டுள்ளார்.
மாரான், ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலயத்தின் தலைவர் தேர்தல் கடந்த ஜுன் 23 ஆம் தேதி நடைபெற்ற போது அந்த தேர்தலில் நடப்புத் தலைவர் டத்தோ தமிழ்ச்செல்வனை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் தலைவர் ராமன் 250 வாக்குகள் பெற்ற வேளையில் டத்தோ தமிழ்ச்செல்வனுக்கு 206 வாக்குகள் மட்டுமே கிடைத்து தோல்வியை தழுவினார்.
எனினும் இத்தேர்தலில் கள்ள வாக்குகள் பதிவாகியிருப்பதாக டத்தோ தமிழ்ச்செல்வன் தரப்பினர் சர்ச்சையை உருவாக்கியதைத் தொடர்ந்து தலைவர் தேர்தல் முடிவை அறிவிக்க தேர்தல் அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
தேர்தல் அதிகாரிகளின் இந்த தன்மூப்பான செயலை எதிர்த்து டத்தோ தமிழ்ச்செல்வன் மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கு எதிராக ராமன் தெமர்லோ உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
ஆலயத்தின் தலைவர் பதவிக்கான தேர்தலில் டத்தோ தமிழ்ச்செல்வன் தம்மிடம் தோல்விக் கண்டதை நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் என்பதுடன் தேர்தல் அதிகாரிகளான என். சுப்பிரமணியம், டத்தோ எம்.பி. நாதன், டத்தோ எம். தேவேந்திரன், எம்.தர்ம கவுண்டர் மற்றும் ஜி. அரிகிருஷ்ணன் ஆகியோர் தமது வெற்றியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி ராமன் இநத வழக்கை சார்வு செய்துள்ளார்.
அதேவேளையில் இந்த வழக்கு மீதான விசாரணை நடைபெற்று தீர்வு காணப்படும் வரையில் ஆலயத்தை வழிநடத்தும் பொறுப்பை தமக்கு வழங்கப்பட வேண்டும் என்பதுடன் அதுவரையில் டத்தோ தமிழ்ச்செல்வன் மற்றும் தேர்தல் அதிகாரிகளான மேற்கண்ட ஐவருக்கு எதிராக ஓர் இடைக்கால தடை உத்தரவை பெறுவதில் ராமன் வெற்றி பெற்றுள்ளார்.
இவ்வழக்கில் பிரதிவாதி என்ற முறையில் இராமன் சார்பில் வழக்கறிஞர் செல்வம் சண்முகம் ஆஜரானார்.