கட்டுமான நிறுவன இயக்குநரை ஏமாற்றியதாக மூவர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர், ஜூலை 24-

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஒன்பது லட்சம் வெள்ளி சம்பந்தப்பட்ட ஆடம்பர அடுக்குமாடி வீடமைப்புத் திட்டத்தை பெறுவதற்காக கட்டுமான நிறுவனம் ஒன்றின் இயக்குநரை ஏமாற்றியதாக சகோதரன், சகோதரி உட்பட மூவர் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

43 வயது ரெமிரிசல் என்ற ரெமி ரிசாக் மற்றும் சகோதரன் சகோதரியான 53 வயது ஐ. குமாரா, 49 வயது ஐ. சுமதி ஆகியோர் நீதிபதி ஹமிதா முகமது டெரில் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

இந்த மூவரும் கடந்த 2018 ஆம் ஆண்டு பிரிக்பீல்ட்ஸ், ஜாலான் ஸ்காட்- டில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்கு மாடி வீட்டில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

MZMA Construction என்ற நிறுவனத்திற்கு சொந்தமான 9 லட்சத்து 87 ஆயிரத்து 84 வெள்ளி 14 காசை தங்களின் நலன் சார்ந்த வங்கி கணக்கான சுமதி, ரெமிரிசல் மற்றும் Aston Villa என்ற பெயரில் மாற்றிக் கொண்டதாக இந்த மூவரும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 10 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 420 பிரிவின் கீழ் மூவரும் நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

WATCH OUR LATEST NEWS