பெட்டாலிங் ஜெயா, ஜூலை 24
பினாங்கு மாநிலத்தின் நில அடையாளத்தை தாங்கிய நிலையில் சுமார் 126 ஆண்டுகள் சேவையில் இருந்த பழங்கால பெர்ரிகள் ( Feri) அனைத்தும் அகற்றப்படவிருக்கின்றன என்று பினாங்கு துறை முக ஆணையம் அறிவித்துள்ளது.
இதில் ஓர் உணவகமாக கடலில் மிதக்கப்படவிருந்த புலாவ் கபாஸ் பெர்ரியை மேம்படுத்தும் திட்டம், அதிகரித்து வரும் செலவினம் காரணமாக அத்திட்டத்தை தொடர்வதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த அந்த ஆணையத்தின் தலைவர் ஓ சூன் ஹின் தெரிவித்தார்.
பினாங்கில் ஒரு நூற்றாண்டு காலத்திற்கு மேலாக சேவையில் இருந்த இந்த பழங்கால பெர்ரிகள், கடந்த 2020 ஆம் ஆண்டு விரைவு இயந்திரப் படகுகள் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த பெர்ரிகளின் சேவை ஒரு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
எனினும் பினாங்கில் சுற்றுப்பயணிகளை கவர்வதற்காக ஓர் அடையாள சின்னமாக கடற்பகுதியில் காட்சிக்கு வைப்பதற்கு பினாங்கு அரசு திட்டமிட்டு இருந்தது.
இன்று அதிகாலையில் பட்டர்வொர்த், சுல்தான் அப்துல் ஹலீம் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த புலாவ் கபாஸ் பெர்ரி, கடலில் மூழ்கியதைத் தொடர்ந்து பழங்கால பெர்ரிகளை தொடர்ந்து பராமரிக்க இயலாது என்றும் அவை கடலிலிருந்து அகற்றப்படவிருக்கின்றன என்று ஓ சூன் ஹின் தெரிவித்தார்.