பெட்டாலிங் ஜெயா, ஜூலை 24-
சிறப்பு கவனிப்புக்குரிய சிறார் பராமரிப்பு மையத்தில் 6 வயது ஆட்டிசம் சிறுவனை நாற்காலியிலிருந்து எட்டி உதைத்து, அடித்து அராஜகம் புரிந்ததாக ஆசிரியர் ஒருவர் பெட்டாலிங் ஜெயா, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
33 வயது தினேஷ் என்ற அந்த ஆசிரியர், மாஜிஸ்திரேட் ஷஹ்ரி அனுவார் அஹ்மத் முஸ்தபா முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
ஆசிரியர் தினேஷ். இக்குற்றத்தை கடந்த ஜுலை 16 ஆம் தேதி காலை 11.50 மணியளவில் பெட்டாலிங் ஜெயா, ஜாலான் SS7/13A என்ற முகவரியில் உள்ள சிறார் பராமரிப்பு மையத்தில் புரிந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மூன்று மாத சிறை அல்லது ஆயிரம் வெள்ளி அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 352 பிரிவின் கீழ் தினேஷ் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
எனினும் தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து தினேஷ் விசாரணை கோரியதைத் தொடர்ந்து அவரை ஒரு நபர் உத்தரவாதத்துடன் ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதித்தது.