விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் இருந்து ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் நீக்கப்பட்டு இருக்கிறார்.
போடா போடி, நானும் ரெளடி தான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை இயக்கியவர் விக்னேஷ் சிவன். இவர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாக இருந்த திரைப்படம் ஏகே 62. அஜித் படமான இதை இயக்கும் பணிகளில் பிசியாக இருந்த விக்கி, அப்படத்திற்கான ஷூட்டிங் தொடங்க இருந்த சமயத்தில் திடீரென அதில் இருந்து நீக்கப்பட்டார். அவர் சொன்ன கதை திருப்தி அளிக்காததால் லைகா நிறுவனம் அந்த முடிவை எடுத்தது.

அஜித் படத்தில் இருந்து தூக்கி எறியப்பட்ட விக்னேஷ் சிவன், எப்படியாவது சாதித்துக் காட்ட வேண்டும் என்கிற முனைப்புடன் தன்னுடைய ட்ரீம் புராஜெக்டான எல்.ஐ.சி படத்தை கையில் எடுத்தார். முதலில் இந்த கதையில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க இருந்தார். ஆனால் அந்த பிளான் அறிவிப்போடு நின்றுபோனது. இதையடுத்து மீண்டும் தூசிதட்டி எடுத்த விக்னேஷ் சிவன், அப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு பதிலாக டிரெண்டிங் நாயகன் பிரதீப் ரங்கநாதனை நடிக்க வைத்துள்ளார்.

இப்படத்தை விக்னேஷ் சிவனின் மனைவி நயன்தாரா, செவன் ஸ்கிரீன் நிறுவனத்துடன் சேர்ந்து தயாரித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இப்படத்திற்கு எல்.ஐ.சி என பெயர் வைக்க எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தற்போது அதில் சிறிய மாற்றம் செய்து எல்.ஐ.கே என மாற்றி இருக்கிறார் விக்கி. இன்று இப்படத்தின் நாயகன் பிரதீப் ரங்கநாதனின் பிறந்தநாள் என்பதால் அவருக்கு பர்த்டே ட்ரீட் கொடுக்கும் விதமாக எல்.ஐ.கே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.
அந்த போஸ்டரின் மூலம் மற்றொரு ஷாக்கிங் தகவலும் வெளிவந்துள்ளது. இப்படம் அறிவிக்கப்பட்டபோது இதற்கு ரவி வர்மன் தான் ஒளிப்பதிவாளராக கமிட்டானார். அவர் தான் முதற்கட்ட படப்பிடிப்பின் போது படமாக்கினார். பின்னர் ஷூட்டிங்கில் விக்னேஷ் சிவனுக்கும், ரவி வர்மனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவர் இப்படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக இடையே செய்திகள் வந்தன. அதை உறுதி செய்யும் விதமாக தற்போது வெளியாகி உள்ள பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ரவிவர்மன் பெயர் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக மாஸ்டர், கைதி போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சத்யன் சூரியன் பெயர் இடம்பெற்று இருக்கிறது. ரவிவர்மனுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே என்ன பிரச்சனை என்பது புரியாத புதிராகவே உள்ளது.