கோலசிலாங்கூர், ஜூலை 25-
கோலசிலாங்கூர்,ஜெராம் வட்டாரத்தில் இரண்டு சிறுமிகளை கடத்திய குற்றத்திற்காக Pisang Goreng வியாபாரி ஒருவருக்கு, சுங்கை பெசார் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 24 மாத சிறையும், 2 ஆயிரம் வெள்ளி அபராதமும் விதித்தது.
31 வயது முகமது ஷரிசா ஒத்மான் என்ற அந்த பீசாங் கோரேங் வியாபாரி தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் சிதி ஹாஜர் அலி மேற்கண்ட தண்டனையை விதித்தார்.
சம்பந்தப்பட்ட பீசாங் கோரேங் வியாபாரி, கடந்த ஜுலை 19 ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் கோலசிலாங்கூர், ஜெராம், தமான் இகான் எமாஸ், ஜாலான் இகான் எமாஸ் 2 இல் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தன்னுடன் வந்தால் 50 வெள்ளி தருவதாக கூறி, அந்த சிறுமிகளை அவர் கடத்திச் சென்றுள்ளார்.
6 மற்றும் 8 வயதுடைய அந்த சிறுமிகள் கடத்தப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே மீண்டும் கண்டு பிடிக்கப்பட்டனர். தங்களை Perodua Bezza காரில் கடத்திச் சென்ற நபர், பின்னர் மற்றொரு தாமானில் இறக்கிவிட்டு சென்று விட்டதாக அந்த சிறுமிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அந்த பீசாங் கோரேங் வியாபாரி அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார்.
எனினும் தாம் செய்த குற்றத்திற்காக வருந்துவதாக அந்த பீசாங் கோரேங் வியாபாரி நீதிமன்றத்தில் தனது கருணை மனுவில் குறிப்பிட்டார். தனக்கு இரண்டு ஆண் மகன்கள் உள்ளனர் என்றும், பெண் பிள்ளைகள் இல்லை என்றும், அந்த சிறுமிகளை கண்டதும் பாசத்தின் அடிப்படையில் காரில் ஏற்றிக் சென்று பக்கத்து தாமானில் இறக்கிவிட்டதாக அந்நபர் தனது கருணை மனுவில் குறிப்பிட்டார்.
எனினும் இது போன்ற செயல்கள் அனுமதிக்கப்படக்கூடாது என்று குறிப்பிட்ட மாஜிஸ்திரேட் சிதி ஹாஜர் அலி, மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க சம்பந்தப்பட்ட நபருக்கு 24 மாத சிறைத் தண்டனை விதிப்பதாக தமது தீர்ப்பில் தெரிவித்தார்.