புத்ராஜெயா, ஜூலை 25-
அரசாங்கத்தினால் செயல்படுத்தப்பட்ட இரண்டாவது வாய்ப்புக்குரிய கொள்கையின் கீழ் ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 510 பேர் திவால் நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் மேற்கொண்ட இந்த முயற்சியின் மூலம் முதலில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேரை திவால் நிலையிலிருந்து மீட்பது என்ற கொள்கை வகுக்கப்பட்ட போதிலும் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட தாண்டிவிட்டதாக நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
நாட்டை உலுக்கிய கோவிட் 19 போன்ற நெருக்கடிமிகுந்த காலகட்டத்தில் வேலை இழந்து பொருளாதார சிரமத்தை எதிர்நோக்கிய பலர், அக்காலக்கட்டத்தில் எதிர்பாராத விதமாக திவால் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
எனவே அரசாங்கத்தின் கருணைமிகுந்த கோட்பாட்டின் கீழ் உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில் அவர்கள் திவால் நிலையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.