சபா, ஜூலை 25-
சபாவில் உள்ள ஒரு வங்கியில் வாடிக்கையாளர்களின் நிரந்தர சேமிப்புப்பணத்தை இலக்காக கொண்டு குறிப்பிட்ட சில வங்கி கணக்குகளிலிருந்து மொத்தம் 2 கோடியே 42 லட்சம் வெள்ளி மீட்கப்பட்டு இருப்பது தொடர்பில் வங்கியின் இரண்டு நிர்வாகிகள் உட்பட 10 பேர், கோத்தாகினாபாலு செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.
கடந்த ஜுன் மாதம், பெட்டாலிங் ஜெயாவில் உள்ள சில வாடிக்கையாளர்கள், வங்கியில் தாங்கள் வைத்திருக்கும் நிரந்தர சேமிப்புப்பணம் கணக்கிலிருந்து சிறுக சிறுக பணம் மீட்கப்பட்டு வருவதாக சந்தேகித்ததைத் தொடர்ந்து வங்கி நிர்வாகிகள் உட்பட ஒரு கும்பலே திட்டமிட்டு, வாடிக்கையாளர்களின் நிரந்த சேமிப்பு பணத்தை சூறையாடியிருப்பது அம்பலமானது..
வங்கியின் நிர்வாகிகளான 38 வயது சின் நியூக் தியென் மற்றும் 53 வயது பியானஸ் எட்டிப் உட்பட 56 வயது சுப்பிரமணியம் தங்கவேலு, 38 வயது ஜோசபின் ஜே லங்கான், 60 வயது நசீர் அப்துல் ரசீத், 56 வயது சுகுமாறன் K. பொன்னையா, 35 வயது விரோனிஸ் ஜோனோக், 62 வயது லியோங் ஹின் பிங், 46 வயது ஹஸ்ரன் மாகின் மற்றும் 53 வயது மஸ்லான் ஜனவரி ஆகியோரே குற்றஞ்சாட்டப்பட்ட அந்த பேர் ஆவார்.
நீதிபதி அமீர் சியா அமீர் ஹாசன் முன்னிலையில் இந்த பத்து பேருக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது. எனினும் அனைவரிடமும் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
குற்றஞ்சாட்டப்பட்ட நபரான ஜோசபின் ஜே லங்கான் தலைமையில் இந்த திட்டமிட்ட குற்றச்செயல்கள் நிகழ்ந்து இருப்பதாக அரசு தரபபில் வழக்கிற்கு தலைமையேற்றுள்ள துணை பப்ளிக் பிராசிகியூட்டர் லினா ஹனினி இஸ்மல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த பத்து பேரும் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து ஜுலை மாதம் 10 ஆம் தேதி வரையில் சபா, கோத்தாகினாபாலுவில் உள்ள ஒரு வங்கியில் இந்த கடுமையான குற்றத்தை புரிந்துள்ளனர் என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 130 V பிரிவின் கீழ் பத்து பேரும் குற்றச்சாட்டை எதிர்நேக்கியுள்ளனர்.
குற்றஞ்சாட்டப்பட்ட பத்து பேருக்கும் நீதிமன்றம், ஜாமீன் அனுமதி மறுத்துள்ளது.