கோலா லிப்பிஸ், ஜூலை 26-
சிவப்பு நிற சமிக்ஞை விளக்கு எச்சரிக்கையையும் மீறி, செலுத்தப்பட்ட 4 Drive வாகனம் ஒன்று, எதிரே சென்று கொண்டிருந்த கார் ஒன்றை மோதித் தள்ளியதில் அந்த காரில் பயணித்த கணவனும், மனைவியும் உயிரிழந்தனர். இதில் அவர்களின் இரண்டு பெண் பிள்ளைகள் காயத்துடன் உயிர் தப்பினர்.
இச்சம்பவம் நேற்று இரவு 10.20 மணியளவில் கோலாலம்பூர் – கோத்தாபாரு சாலையின் 350 ஆவது கிலோமீட்டரில் ரவுப், ஜாலான் லிபிஸ், பத்து 3-வில் லிங்கரன் தெங்கா உத்தமா சமிக்ஞை விளக்குக்கு அருகில் நிகழ்ந்தது.
இதில் Proton Wira காரை செலுத்திய ஒரு பாதுகாவலரான 34 வயது முஹம்மது அனாசர் கமரோஜமான் மற்றும் அவரின் 40 வயது மனைவி சாலினா அலி ஆகியோர் சம்பவ இடத்திலேயே மாண்டனர்.
அவர்கள் பயணித்த காரை Toyota Hilux வாகனம் மோதியதாக ரவூப் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பரின்டெண்டென் மோஹட் ஷஹரில் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் உயிரிழந்த தம்பதியரின் 15 மற்றும் 20 வயதுடைய இரு பெண் பிள்ளைகள் காயத்துடன் உயிர் தப்பினர். அவர்கள் ரவுப், டோங்- கிற்கு செல்வதற்கு CSR ரவுப் சாலையிலிருந்து வெளியேற முயற்சி செய்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று சுப்பரின்டெண்டென் மோஹட் ஷஹரில் குறிப்பிட்டார்.
காயமுற்ற அந்த இரு பெண் பிள்ளைகளும் கோலா லிப்பிஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.