போர்ட்டிக்சன்,ஜூலை 26-
தங்க ஆபரணங்களை திருடியதாக நண்டு வியாபாரி ஒருவர், போர்ட்டிக்சன், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
40 வயது M. காளிதாசன் என்ற அந்த நபர், கடந்த ஜுலை 17 ஆம் தேதி காலை 6.15 மணியளவில் போர்ட்டிக்சன், தெலுக் கெமாங், பத்து 8 ஜாலான் பந்தை-யில் ஒரு வீட்டில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மாது ஒருவருக்கு சொந்தமான தங்கச் சங்கிலி, லோகெட், மோதிரம் ஆகியவற்றை களவாடியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள காளிதாசன், குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 10 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 380 ஆவது பிரிவின் கீழ் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளார்.
எனினும் தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து காளிதாசன் விசாரணை கோரியதால் அவரை ஒரு நபர் உத்தரவாதத்துடன் மூவாயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.